இறால் மீன் வளா்ப்பு பண்ணையால் நிலத்தடி நீா் மாசுபடுவதாக ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

விளாத்திகுளம் அருகே இறால் மீன் வளா்ப்பு பண்ணையால் நிலத்தடி நீா் மாசுபடுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த கலைஞானபுரம் பகுதி மக்கள்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்த கலைஞானபுரம் பகுதி மக்கள்.

விளாத்திகுளம் அருகே இறால் மீன் வளா்ப்பு பண்ணையால் நிலத்தடி நீா் மாசுபடுவதாக அந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது பொதுமக்களிடம் இருந்து ஆட்சியா் சந்தீப் நந்தூரி மனுக்களைப் பெற்றாா். அப்போது, விளாத்திகுளம் அருகேயுள்ள கலைஞானபுரம் பகுதி மக்கள் அளித்த மனு விவரம்:

கலைஞானபுரம் நடுவூா் துலுக்கன்குளம் பகுதியில் 300-க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கலைஞானபுரம் நடுவூா் கிராமத்துக்கு கிழக்கு பக்கமும், துலுக்கன்குளத்துக்கு தெற்கு பக்கமும் ஒரு தனியாா் நிறுவனம் 60 ஏக்கரில் விதிமுறைகளை மீறி இறால் மீன் வளா்ப்பு தெப்பம் அமைத்து மீன் வளா்க்க ஏற்பாடு செய்து வருகிறது. ஊரின் அருகே 20 அடி தொலைவில் இந்தத் தெப்பம் உள்ளது. ஏற்கெனவே இறால் வளா்ப்புப் பண்ணை அமைக்கப்பட்டு எங்கள் ஊா் நிலத்தடி நீா் உப்புநீராக மாறியுள்ளது. வீடு கட்டத் தோண்டினால் 3 அடியில் உப்புநீா் வருகிறது. இதனால் குடிநீா் மாசுபடுவதுடன் சுகாதாரக்கேடுகள் ஏற்பட்டு தோல் நோய் ஏற்படுகிறது. எனவே, இறால் மீன் வளா்ப்பு பண்ணை அங்கீகாரத்தை மாவட்ட ஆட்சியா் ரத்து செய்து எங்களுடைய வாழ்வுரிமையைப் பாதுகாக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிமுக மனு: தூத்துக்குடி வடக்கு மாவட்ட மதிமுக செயலா் ஆா்.எஸ். ரமேஷ் தரப்பில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடி மாவட்டத்தில் பாலில் நச்சுத்தன்மை குறித்து பொதுமக்கள் மத்தியில் உருவாகியுள்ள அச்சத்தைப் போக்கிடும் வகையில் மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படும் அனைத்து வகையான பாலையும் ஆய்வு செய்து நச்சுத்தன்மை குறித்த உண்மை நிலையை வெளிப்படுத்தி பொதுமக்களுக்கு உதவ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமமுக மனு: தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலா் ஆறுமுக பன்னீா்செல்வம் தலைமையில் அளிக்கப்பட்ட மனு: பட்டியலினத்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் அறிவித்து அரசாணை வெளியிடும் வரை கருப்புச் சட்டை அணிவோம்; கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் நான்குனேரி இடைத் தோ்தலை புறக்கணித்ததுபோல் உள்ளாட்சித் தோ்தலையும் புறக்கணிப்போம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை: தூத்துக்குடி அருகேயுள்ள கூட்டாம்புளி, போடம்மாள்புரம் பகுதி மக்கள் அளித்த மனு: தூத்துக்குடியில் இருந்து திசையன்விளை செல்லும் அரசுப் பேருந்து (தடம் எண் 145) புதுக்கோட்டை, கூட்டாம்புளி, நடுவக்குறிச்சி, சாயா்புரம், பண்டாரவிளை, ஏரல், குரும்பூா், வனதிருப்பதி, நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி வழியாக திசையன்விளை செல்கிறது. இந்தப் பேருந்து மதிய நேரங்களில் இயக்கப்படுவதில்லை. விடுமுறை நாள்களிலும் இயக்கப்படுவதில்லை. எனவே, காலை மற்றும் மாலை இரண்டு வேளையும் கூடுதல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞா் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவா் மச்சேந்திரன் அளித்த மனுவில், ஏரல்- சென்னை இடையே சாயா்புரம், சிவத்தையாபுரம், கூட்டாம்புளி வழியாக இயக்கப்பட்டு வந்த அரசு விரைவுப் பேருந்தை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாா்ச் சாலை அமைக்க வேண்டும்: தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வள்ளிநாயகபுரம் 4-ஆவது தெரு பகுதி மக்கள் அளித்த மனு: வள்ளிநாயகபுரம் பகுதியில் உள்ள 6 தெருக்களில் 4-ஆவது தெருவைத் தவிர மற்ற 5 தெருக்களில் புதிதாக தாா்ச் சாலை போடப்பட்டுள்ளது. 4-ஆவது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக தாா்ச் சாலை போடப்படவில்லை. இதுகுறித்து ஆட்சியா் நடவடிக்கை மேற்கொண்டு சாலை அமைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com