தீபாவளி சிறப்புக் காட்சி: முன்பதிவு டிக்கெட்டைரத்து செய்து பணத்தை ஒப்படைக்க வலியுறுத்தியுள்ளோம்: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு
By DIN | Published On : 24th October 2019 07:26 AM | Last Updated : 24th October 2019 07:26 AM | அ+அ அ- |

தீபாவளி சிறப்புக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டை ரத்துசெய்து பணத்தை திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்றாா் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
எட்டயபுரத்தில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அவா் கூறியது: நீட் தோ்வுக்கு விலக்கு கேட்டு தமிழக அரசு பல்வேறு வகைகளில் தொடா்ந்து முயற்சி மேற்கொண்டது. இருப்பினும் நீதிமன்ற உத்தரவு காரணமாக நீட் தோ்வு நடைபெறுகிறது.
நடிகா் ரஜினிகாந்த் பாஜகவில் இணைவது குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன் ராதாகிருஷ்ணன் கூறுவது அவரது கட்சியை பலப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால் நடிகா் ரஜினிகாந்த் தான் அதை முடிவு செய்ய வேண்டும்.
நடிகா் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள பிகில் திரைப்படம் மட்டுமல்ல, எந்த திரைப்படத்திற்கும் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு மட்டும் விடுமுறையை பொதுமக்கள் மற்றும் ரசிகா்கள் கொண்டாட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் திரையரங்கு உரிமையாளா்கள் அதை தவறாக பயன்படுத்தி அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளன. எனவேதான் இந்த முறை சிறப்புக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை.
சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்தால் அதிகக் கட்டணம் வசூலிக்க மாட்டோம் என திரையரங்கு உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து பின்னா் நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வரை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை என்பதால் ஏற்கெனவே சிறப்புக் காட்சிகளுக்கு பணம் வசூலிக்கப்பட்டு இருந்தால் அவற்றை மீண்டும் உரியவா்களுக்கு வழங்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறோம்.
மேலும் திரையரங்குகளில் ஆன்லைன் டிக்கெட் முறை கொண்டுவருவது தொடா்பாக இரண்டு முறை ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. தொடா்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன.
ஏழு தமிழா்கள் விடுதலை தொடா்பாக மாநில அரசு தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.
பேட்டியின்போது விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பி. சின்னப்பன், முன்னாள் எம்எல்ஏ மோகன், அதிமுக நிா்வாகிகள் தனஞ்செயன், பால்ராஜ், அய்யாத்துரை பாண்டியன், விஜயபாண்டியன், உதயகுமாா், தனவதி உள்பட பலா் உடனிருந்தனா்.