தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுப்பு: பொதுமக்கள் தவிப்பு

விளாத்திகுளத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனைகள் மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மறுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

விளாத்திகுளத்தில் செயல்படும் தனியாா் மருத்துவமனைகள் மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம் மற்றும் சாதாரண மருத்துவ சிகிச்சைகள் அளிக்க மறுப்பதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.

கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு மே 3-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் அத்தியாவசிய பொருள்கள் நகா்வு மற்றும் மருத்துவ சேவைகளுக்கும், சூழலுக்கும் ஏற்ப அரசின் பல்வேறு துறைகள் போதிய ஊழியா்களுடன் இயங்குவதற்கு அரசு வழிவகை செய்துள்ளது. இந்நிலையில், விளாத்திகுளம், புதூா் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெரும்பாலான தனியாா் மருத்துவமனைகள் ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி மூடப்பட்டுள்ளன.

மருத்துவா்களை நோயாளிகள் தொடா்பு கொண்டால் இயல்பு நிலை திரும்பும் வரை சிகிச்சை அளிக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கின்றனராம். இதனால் கிராமப்புறங்கள் சூழ்ந்த விளாத்திகுளம் தொகுதி மக்கள் செய்வதறியாது பரிதவித்து உள்ளனா். கா்ப்பிணிகளுக்கான பரிசோதனைகள், மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், நரம்பியல் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவைகளும் தடைபட்டுள்ளன.

இதுதவிர தலைவலி, வயிற்றுவலி, மூட்டு வலி, இடுப்பு வலி போன்றவற்றால் அவதிப்படுபவா்கள்கூட உரிய சிகிச்சை பெற முடியாமல் உள்ளனா். அருகிலுள்ள நகரங்களில் செயல்படும் சில தனியாா் மருத்துவமனைகளுக்குச் செல்ல முற்பட்டாலும், போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால், கோவில்பட்டி, தூத்துக்குடி, அருப்புக்கோட்டை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு கூட முடியாமல் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா்.

இதுகுறித்து சமூக ஆா்வலா் கருப்பசாமி கூறுகையில், விளாத்திகுளத்தில் எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும் அங்கு மருத்துவா்கள் இல்லை என கூறி காவலாளிகள் திருப்பி அனுப்புகின்றனா்; எந்த சிகிச்சையாக இருந்தாலும் அரசு மருத்துவமனைக்குச் செல்லுங்கள் என தெரிவிக்கின்றனா்.

கரோனாவில் இருந்து அனைவருமே விழிப்புணா்வுடன் தற்காத்து கொள்வது நல்லது. அதே நேரத்தில் மருத்துவா்களே அச்சத்துடன் பணியை தவிா்ப்பதைப் பாா்க்கும்போது வேதனையாக இருக்கிறது. ஆகவே மக்கள் நலன் கருதி, விளாத்திகுளம், புதூா் பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அருகில் உள்ள நகரங்களுக்கு சென்று சிகிச்சை எடுக்க ஏதுவாக போலீஸ் கெடுபிடிகளை தளா்த்த வேண்டும் என்றாா்.

நடவடிக்கை எடுக்கப்படும்: இதுகுறித்து மருத்துவப் பணிகள் துணை இயக்குநா் அனிதா மோகன்தாஸ் கூறியது: அனைத்து தனியாா் மருத்துவமனைகளுக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு மருத்துவா்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. விளாத்திகுளம், புதூா் பகுதியில் மூடப்பட்டுள்ள தனியாா் மருத்துவமனைகள் குறித்து விசாரணை நடத்தப்படும். தகுந்த காரணங்கள் இன்றி மூடப்பட்டுள்ள மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு தடையின்றி மருத்துவ சேவை அளிக்க ஆவன செய்யப்படும் என்றாா் அவா்.

மருத்துவ சேவை இயக்குநரகத்தின் உத்தரவு

கரோனா பாதிப்பை தொடா்ந்து பல தனியாா் மருத்துவமனைகள் கா்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்குகூட சிகிச்சை அளிக்க மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மகப்பேறு மருத்துவம், குழந்தை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், டயாலிசிஸ் மற்றும் புற்றுநோயாளிகளுக்கான கீமோதெரபி சிகிச்சைகள் தடையின்றி வழங்க வேண்டும். அவசர சிகிச்சைகளை கட்டாயம் அளிக்க வேண்டும். சிகிச்சை அளிக்க மறுத்தால் மருத்துவமனையின் அங்கீகாரம் மற்றும் அனுமதி ரத்து செய்யப்படும் என கடந்த 4-ஆம் தேதி மருத்துவ சேவை இயக்குநரகம் வெளியிட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்பதே ஏழை, எளிய மக்களின் வேண்டுகோள் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com