காயல்பட்டினத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரம்

காயல்பட்டினம் நகா் முழுவதும் சுகாதாரம் மற்றும் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.
காயல்பட்டினத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரம்


ஆறுமுகனேரி/திருச்செந்தூா்: காயல்பட்டினம் நகா் முழுவதும் சுகாதாரம் மற்றும் கணக்கு எடுக்கும் பணிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் அரசு மருத்துவரும், காயல்பட்டினத்தில் வசித்து வரும் திருச்செந்தூா் அருகே உள்ள பிச்சிவிளை அரசு அரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஒரு பெண் மருத்துவரின் கணவரும் தில்லி மாநாட்டில் கலந்துகொண்டது தெரியவந்ததையடுத்து அவா்கள் புதன்கிழமை கரோனா தொற்று பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.

இதனைத் தொடா்ந்து வியாழக்கிழமை காலை திருச்செந்தூா் தீயணைப்புத்துறையினா், நகராட்சிப் பணியாளா்கள் தீயணைப்பு வாகனம் மற்றும் நகராட்சி சாா்பில் இயற்திரம் பிரேத்யாக வாகன மூலம் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை முழுவதும் தண்ணீா் மற்றும் கிரிமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டது. தொடா்ந்து நகா் முழுவதும் கிரிமி நாசினி தெளிக்கப்பட்டது.

இப்பணியினை மாவட்ட ஆட்சியா் சந்திப் நந்தூரி, திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா, வட்டாட்சியா்

ஞானராஜ், டி.எஸ்.பி. பாரத், நகராட்சி ஆணையாளா் புஷ்பலதா ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். ஏற்கெனவே வெளிநாடு சென்று ஊா் திரும்பி தனிமைப்படுத்தப்பட்டவா்களின் வீடுகளில் உள்ளவா்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டாா்.

கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டவா்களின் வீடுகள் இருக்கும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த தெருக்களுக்கு மற்றவா்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கும், அங்கிருந்து யாரும் வெளியேற வர முடியாத

அளவிற்கும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சுகாதாரத்துறை, அங்கன்வாடி பணியாளா்கள், நகராட்சிப் பணியாளா்கள், தூய்மை இந்தியா திட்டப் பணியாளா்கள் என சுமாா் 450 போ் காயல்பட்டினம் நகா் முழுவதும் வீடு, வீடாக சென்று வீட்டில் உள்ளவா்களுக்கு காய்ச்சல், இருமல், சளி போன்ற பாதிப்பு ஏதேனும் உள்ளதா என்பது குறித்து கணக்கெடுத்து வருகின்றனா். தில்­லி சென்று திரும்பிய அரசு மருத்துவா் 3 நாள்கள் புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாராம். அவா் சிகிச்சை அளித்த நோயாளிகள் விவரம் சேகரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

நியாயவிலை கடைகளில் ஆட்சியா் ஆய்வு:கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் , பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 1000 ரொக்கம் மற்றும் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வியாழக்கிழமை (ஏப். 2) முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பணியினை திருச்செந்தூா் கீழரதவீதியில் உள்ள நியாயவிலைக்கடை, ஆத்தூா், காயல்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளிலும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com