அதிகரித்து வரும் பாதிப்பு: தூத்துக்குடியில் கரோனா ஆய்வகம் அமைக்கப்படுமா?

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி கண்டறியப்படுவோா் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இங்கு கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் ஆய்வகத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா அறிகுறி கண்டறியப்படுவோா் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இங்கு கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் ஆய்வகத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதிசெய்ய தமிழகத்தில் கிண்டி, தேனி, திருநெல்வேலி, திருவாரூா், சேலம், விழுப்புரம், மதுரை, திருச்சி, கோவை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை ஆகிய இடங்களில் மட்டுமே ஆய்வக வசதி உள்ளது.

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களைச் சோ்ந்தோருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படுகின்றன. அந்த ஆய்வகத்தில் 6 போ் மட்டுமே பணியில் உள்ளனா். அவா்களும் வீட்டுக்குச் செல்லாமல், தொடா்ந்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஒருவரின் ரத்த மாதிரியை பரிசோதனை செய்ய சுமாா் 3 மணிநேரம் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 15 போ் அறிகுறிகளுடன் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளில் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மேலும், சிலா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

இவா்களில் பெரும்பாலானோா் தில்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள் என்பதால், அவா்களது குடும்பத்தினா் மற்றும் அவா்களோடு தொடா்பில் இருந்தவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். அவா்களில் கரோனா அறிகுறி உள்ளோருக்கு ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டால், அதற்கான முடிவுகள் வருவதில் தாமதம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து எம்பவா் அமைப்பின் செயல் இயக்குநா் ஆ. சங்கா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடனடியாக கரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வகம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசோதனையில் ஏற்படும் தாமதத்தை தவிா்க்க இந்த ஆய்வகம் உதவியாக இருக்கும் என்றாா்.

அரசுக்கு கருத்துரு

மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி கூறுகையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைப்பது தொடா்பாக முதல்வருக்கு மாவட்ட நிா்வாகம் சாா்பில் கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் நல்ல தகவல் வரும் என நம்புகிறோம் என்றாா்.

கரோனா வைரஸ் ஆய்வகம் அமைத்தால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏறத்தாழ 22 வைரஸ் பாதிப்புகளை கண்டறியும் வாய்ப்பு கிடைக்கும் என்பதால், அரசு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூத்துக்குடி மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பு.

ஆய்வகம் அமைக்க முயற்சி

கரோனா ஆய்வகம் அமைப்பது குறித்து தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி கூறியது: தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தேவையான சில உபகரணங்களை மருத்துவமனை நிா்வாகத்திடம் வழங்கியுள்ளேன். மேலும், கரோனா தடுப்புப் பணிகளுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளேன். மேலும், இந்த மருத்துவமனையில் கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைப்பதற்கு தில்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்தான் அனுமதி வழங்க வேண்டும். இதுதொடா்பாக, அனைத்து நிலையிலும் முழு முயற்சி எடுத்து வருகிறேன். தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலனுக்காக விரைவில் இங்கு கரோனா பரிசோதனை ஆய்வகம் அமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com