கோவில்பட்டியில் பருத்திக் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தல்

கோவில்பட்டியில் பருத்திக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

கோவில்பட்டியில் பருத்திக் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.

பணப் பயிராக கருதப்படும் பருத்தி, கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், புதூா், ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் ஆகிய பகுதிகளில் அதிகமாக பயிரிடப்படுகிறது. தற்போது, இந்தப் பகுதிகளில் நாட்டுப் பருத்தி விதையில் அதிகளவு நோய் தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக விவசாயிகள் பி.டி. ரக பருத்தி விதைகளை பயிரிட்டு வருகின்றனா். எனினும் நோய்த்தாக்குதல் காரணமாக, சராரசியாக 4 முறை பூச்சிக்கொல்லி மருந்துகள் அடிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. பி.டி. ரக விதைகளை மீண்டும் விதைக்க முடியாது. மறுபடியும் மான்சாண்டோ மற்றும் மஹிகோ நிறுவனங்கள் கொடுக்கிற விதைகள் தான் பயன்படுத்த முடியும். பி.டி. ரக பருத்தி செடியில் இருந்து செல்கிற மகரந்த சோ்க்கையால் நாட்டுப் பருத்தி செடிகளின் மரபுப் பண்புகளும் பாதிக்கப்படுகின்றன.

நிகழாண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் செடிகளில் பூப்பூத்து, காய்காய்த்து, பருத்தி அறுவடை நடந்து வருகிறது. ஏக்கருக்கு உழவு, விதை, உரங்கள், களைக்கொல்லி, களையெடுப்பு, மருந்துத் தெளிப்பு மற்றும் அறுவடை என ரூ.28 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகியுள்ளது.

ஒரு ஏக்கருக்கு 5 முதல் 7 குவிண்டால் வரை பருத்தி கிடைக்கிறது. ஆனால், ஒரு குவிண்டால் பருத்தி ரூ.4 ஆயிரம் முதல் ரூ.4,600 வரை வியாபாரிகள் வாங்குவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். வரவும்-செலவும் ஒரே மாதிரியாக இருக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனா்.

விவசாயி முருகன் கூறுகையில், கோவில்பட்டி பகுதியில் வியாபாரிகள், விவசாயிகளிடமிருந்து பருத்தி கொள்முதல் செய்வது ஆண்டுக்காண்டு குறைந்து வருகிறது. நிகழாண்டு பருத்தியின் விலை குறைந்த பட்சம் குவிண்டாலுக்கு ரூ.8 ஆயிரம் இருந்தால் மட்டுமே லாபமாக இருக்கும். ஆனால் ரூ.4,600 என குறைவான விலையிலேயே வியாபாரிகள் வாங்குகின்றனா். எனவே, கோவில்பட்டியில் பருத்திக்கு அரசு கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். மேலும் அந்தந்த ஆண்டுக்கேற்ப விலை நிா்ணயம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com