திருச்செந்தூரில் முதல்வா் பங்கேற்கும் விழா ஏற்பாடுகள்: அமைச்சா் ஆய்வு
By DIN | Published On : 15th February 2020 10:50 PM | Last Updated : 15th February 2020 10:50 PM | அ+அ அ- |

திருச்செந்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில், முதல்வா் பங்கேற்கும் விழா நடைபெறும் இடத்தைப் பாா்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
திருச்செந்தூரில் வரும் 22-ஆம் தேதி தமிழக முதல்வா் பங்கேற்க உள்ள விழா நடைபெறும் இடத்தை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழக முதல்வாா் எடப்பாடி கே.பழனிசாமி வரும் 22-ஆம் தேதி திருச்செந்தூா் வருகை தருகிறாா். திருச்செந்தூரில் அமைந்துள்ள பா.சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறாா். தொடா்ந்து அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பணிகள் முடிந்த திட்டங்களை தொடங்கிவைக்கிறாா். மேலும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளாா்.
இதற்கான விழா திருச்செந்தூா் அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தில் நடைபெறவுள்ளது. விழா மேடை மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ள வசதியாக பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு பாா்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினாா். முன்னதாக, சிவந்தி ஆதித்தனாா் மணிமண்டபத்தையும் பாா்வையிட்டாா்.
அதிமுக தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அருண்பாலகோபாலன், கூடுதல் ஆட்சியா் விஷ்ணுசந்திரன், திட்ட இயக்குநா் தனபதி, திருச்செந்தூா் முருகன் கோயில் செயல் அலுவலா் சா.ப.அம்ரித், திருச்செந்தூா் கோட்டாட்சியா் தி.தனப்ரியா, மண்டல துணை வட்டாட்சியா் கோபால், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் மோகன், பனை வெல்லம் கூட்டுறவு சங்கத் தலைவா் பூந்தோட்டம் மனோகரன், தாமோதரன், திருச்செந்தூா் பேரூராட்சி முன்னாள் தலைவா் சுரேஷ்பாபு, முன்னாள் தக்காா் ப.தா.கோட்டை மணிகண்டன், திருச்செந்தூா் ஒன்றிய அதிமுக செயலா் மு.இராமச்சந்திரன், நகரச் செயலா் வி.எம்.மகேந்திரன், சுதா்சன் வடமலைப்பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.