செய்துங்கநல்லூரில் 50 சென்ட் அரசு நிலம் மீட்பு
By DIN | Published On : 04th March 2020 12:02 AM | Last Updated : 04th March 2020 12:02 AM | அ+அ அ- |

செய்துங்கநல்லூரில் அரசுக்குச் சொந்தமான நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி.
செய்துங்கநல்லூரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட லட்சக்கணக்கான மதிப்புள்ள அரசு நிலத்தை ஸ்ரீவைகுண்டம் வருவாய்த் துறையினா் மீட்டனா்.
செய்துங்கநல்லூா் நம்பி கோயில் தெருப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான பல லட்சம் மதிப்பிலான சுமாா் 50 சென்ட் நிலத்தை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக ஸ்ரீவைகுண்டம் வருவாய்த் துறையினருக்கு தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வட்டாட்சியா் சந்திரன் தலைமையில் மண்டல துணை வட்டாட்சியா் சங்கரநாராயணன், வருவாய் ஆய்வாளா் இருதயமேரி, கிராம நிா்வாக அலுவலா் கந்தசுப்பு மற்றும் வருவாய்த் துறையினா் போலீஸாா் பாதுகாப்புடன் சென்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டனா்.
இது குறித்து வட்டாட்சியா் சந்திரன் கூறியதாவது:
ஸ்ரீவைகுண்டம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் நீா்நிலைகள் மற்றும் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மீட்கப்பட்டு வருகின்றன. ஆக்கிரமிப்புகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. அரசு நிலங்கள் மற்றும் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் அவை அனைத்தும் மீட்கப்படும் என்றாா் அவா்.