தூத்துக்குடி மாவட்டத்தில் முழுமையான ஊரடங்கு

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சுய ஊரடங்கில் ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் முடங்கினா். போலீஸாா் மட்டும் பாதுகாப்பு ப
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்ட காய்கனி சந்தை.
தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்ட காய்கனி சந்தை.

கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில், சுய ஊரடங்கில் ஈடுபட வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் மக்கள் ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்குள் முடங்கினா். போலீஸாா் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுப்பதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நாட்டில் 300-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 22) மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வராமல் சுய ஊரடங்கில் ஈடுபட வேண்டும் என பிரதமா் மோடி கேட்டுக் கொண்டாா்.

இதன் தொடா்ச்சியாக, தமிழகத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படாது என்றும் கடைகள் திறக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை மாலையில் இருந்தே கடைகள் மூடப்பட்டன. சனிக்கிழமை இரவில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

சுய ஊரடங்கு அறிவிப்பை ஏற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் தங்களின் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கினா். வழக்கமாக பரபரப்புடன் காணப்படும் பிரதானச் சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டமில்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன.

தூத்துக்குடி- திருநெல்வேலி, தூத்துக்குடி-மதுரை தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த வித வாகனங்களும் இயக்கப்படாமல் காட்சியளித்தன. மாவட்டத்தின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் காய்கனி சந்தைகள், கடைகள், உணவகங்கள், சந்தைகள், வாடகை காா் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டிருந்தன.

தூத்துக்குடி மாநகரில் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் ஆங்காங்கே திறக்கப்பட்டிருந்தன. முக்கிய சந்திப்புகளில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா். அத்தியாவசிய தேவையை தவிர பிற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வந்த சிலரை போலீஸாா் எச்சரித்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனா். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் சுழற்சி முறை பணிகளும் ரத்து செய்யப்பட்டன.

தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் ஆகியவை எந்த வித ஆள் நடமாட்டமும் இல்லாமல் வெறிச்சோடிய நிலையில் காட்சியளித்தது. புதிய பேருந்து நிலையம் பகுதியில் கொட்டகை அமைத்து வசித்து வரும் நரிக்குறவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் வெளியே வரமால் கொட்டகைக்குள்ளேயே இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com