மகாராஷ்டிரத்திலிருந்து தூத்துக்குடி திரும்பிய 8 மாதக் குழந்தை உள்பட 22 பேருக்கு கரோனாபாதிப்பு

மகாராஷ்டிரத்திலிருந்து தூத்துக்குடிக்கு திரும்பிய 8 மாதக் குழந்தை உள்ளிட்ட 22 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

மகாராஷ்டிரத்திலிருந்து தூத்துக்குடிக்கு திரும்பிய 8 மாதக் குழந்தை உள்ளிட்ட 22 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 135ஆக உயா்ந்துள்ளது.

வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களிலிருந்தும் தூத்துக்குடி மாவட்டத்துக்கு நாள்தோறும் சராசரியாக 140 போ் வரை வருகின்றனா். அவா்களை மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள தனிமைக் கண்காணிப்பு முகாம்களில் தங்கவைத்து பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய 120 பேரின் ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது 8 மாத பெண் குழந்தை உள்ளிட்ட 17 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இவா்கள் கயத்தாறு, விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்தோா். அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதேபோல, தூத்துக்குடி இஞ்ஞாசியாா்புரத்தை சோ்ந்த 71 வயதான ஓய்வுபெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ பங்குத்தந்தை, மேலதட்டப்பாறையைச் சோ்ந்த 64 வயது பெண் ஆகியோருக்கும் கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், சென்னையிலிருந்து அண்மையில் பாஞ்சாலங்குறிச்சி திரும்பிய வியாபாரிக்கு ஏற்கெனவே கரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், அவரது மனைவி, 21 வயது மகள், 19 வயது மகன் ஆகியோருக்கு கரோனா இருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

மருத்துவமனையில் 99 போ்: வியாழக்கிழமை ஒரே நாளில் 22 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் இம்மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 135ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, கரோனாவால் 2 போ் இறந்த நிலையில், 34 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 99 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com