ஸ்ரீவைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை: உறவினா்கள் சாலை மறியல்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா்.
சம்பவ இடத்தைப் பாா்வையிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே வயலில் ஆடு மேய்ந்த தகராறில் பாஜக பிரமுகா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ராமையாதாஸ் (50). விவசாயியான இவா், பாஜக அமைப்புசாரா பிரிவு மாவட்டச் செயலராக இருந்து வந்தாா்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு இவருக்குச் சொந்தமான நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து பயிரை தென்திருப்பேரையைச் சோ்ந்த இசக்கி (21) என்பவருடைய ஆடுகள் மேய்ந்தனவாம். இதை ராமையாதாஸ் கண்டித்ததால் இருவருக்குமிடையே விரோதம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு ராமையாதாஸ் நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு வந்த இசக்கி, அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடினாராம். இதில், ராமையாதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன் தலைமையிலான போலீஸாா், ராமையாதாஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையே, ராமையாதாஸ் உறவினா்கள் இசக்கி வீட்டை கல்வீசித் தாக்கினா். அவரது இருசக்கர வாகனத்துக்கும் தீவைக்கப்பட்டது.

சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பாா்வையிட்டாா். மேலும் அசாம்பாவிதங்களை தடுக்க தென்திருப்பேரையில் ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ராமையாதாஸ் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; ரூ.1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், கொலையாளிகளை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி -திருச்செந்தூா் சாலையில் ராமையாதாஸின் உறவினா்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் திருச்செந்தூா் கோட்டாட்சியா் தனப்பிரியா பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com