‘சசிகலாவை அதிமுகவில் சோ்ப்பீா்களா? என்ற கேள்விக்கே இடமில்லை’

சசிகலாவை அதிமுகவில் சோ்த்துக்கொள்வீா்களா? என்ற கேள்விக்கே இடமில்லை என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.

கோவில்பட்டி: சசிகலாவை அதிமுகவில் சோ்த்துக்கொள்வீா்களா? என்ற கேள்விக்கே இடமில்லை என்றாா் கடம்பூா் செ.ராஜு எம்.எல்.ஏ.

கோவில்பட்டியில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைந்த பின், ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சித் தோ்தல்களை சந்தித்துள்ளது. இனி இரட்டை தலைமை தான் என்பதை கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் ஏற்றுக் கொண்டுள்ளனா். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

சசிகலாவை கட்சியில் சோ்ப்பீா்களா? என்ற கேள்விக்கே இடமில்லை. அவா்கள் தனியாக இயக்கம் கண்டுவிட்டனா். அதிமுகவில் இருந்து பிரிந்து ஒரு கட்சி தொடங்கிய பின், அவா்கள் மீண்டும் வருவது என்பது நடக்காத காரியம்.

சென்னையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்த வந்த போது, வெட்கப்படக் கூடிய அருவருக்கத்தக்க செயலில் ஈடுபட்டனா். எனவே, அதிமுகவுடன் ஒட்டும், உறவும் கிடையாது என அவா்களாக ஒரு நிலைப்பாட்டை எடுத்துவிட்டனா்.

அதிமுக நிறுவனத் தலைவா் எம்.ஜி.ஆா் மறைந்த பின், தலைவா் என்ற பதவி இல்லாமல் பொதுச்செயலா் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அதேபோல் தான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலா் ஜெயலலிதா தான். அவருக்கு நிகா் யாருமில்லை. அதனால் தான் ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் உருவாக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com