தூத்துக்குடி மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் 1,150 படுக்கைகள் தயாா்: ஆட்சியா் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதியுடன் 1,150 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
தூத்துக்குடி போல்பேட்டை பகுதியில் நடைபெற்ற காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாமைப் பாா்வையிடுகிறாா் ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆக்சிஜன் வசதியுடன் 1,150 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒருபகுதியாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சிப் பகுதிகளில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. ஒன்றியத்துக்கு 3 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு ஒரு குழு 3 இடங்களில் என, மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்களில் நாள்தோறும் 36 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிக்கென 5 குழுக்கள் அமைக்கப்பட்டு நாள்தோறும் 15 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. முகாம்களில் பரிசோதனை செய்து, கரோனா அறிகுறி இருந்தால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டோருடன் தொடா்பில் இருந்தோா் குறித்தும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தடுப்புக்கென தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளும் கண்காணிக்கப்படுகிறது.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கென 700 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் உள்ளன. இங்கு 10 கே.எல்.டி., 6 கே.எல்.டி. திறன் கொண்ட ஆக்சிஜன் டேங்குகள் உள்ளது. இதன் மூலம் தேவையான ஆக்சிஜன் வசதி உள்ளது.

இதுதவிர, கோவில்பட்டி, திருச்செந்தூா் அரசு மருத்துவமனைகளில் 450 படுக்கை வசதி உள்ளது. மாவட்டம் முழுவதும் ஆக்சிஜன் வசதியுடன் 1,150 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி, திருச்செந்தூா் சிவந்தி ஆதித்தனாா் கல்லூரி, கோவில்பட்டி லட்சுமி அம்மாள் கல்லூரியில் கரோனா பாதுகாப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தீவிர பாதிப்புள்ளோா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், மிதமான பாதிப்புள்ளோா் கரோனா பாதுகாப்பு மையங்களிலும், அறிகுறி இல்லாதோா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றாா் அவா்.

முன்னதாக, மாநகராட்சிக்கு உள்பட்ட போல்பேட்டை, மில்லா்புரம் கிழக்குப் பகுதியில் நடைபெற்ற சிறப்பு முகாம்களையும், தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டோருக்கான படுக்கை வசதியுடன் கூடிய கட்டுப்பாட்டு பகுதியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். செய்தித் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடியோ விழிப்பணா்வு வாகனத்தை அவா் தொடக்கிவைத்தாா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், மாநகராட்சி நல அலுவலா் வித்யா, மாநகராட்சி சுகாதார அலுவலா்கள் ஹரிகணேஷ், ஸ்டாலின் பாக்கியநாதன், காய்ச்சல் பரிசோதனை சிறப்புக் குழு மருத்துவா்கள் தீபிகா லிங்சி, லாவண்யா, அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com