திருச்செந்தூரில் அழிந்து வரும் கிணற்று நாகரிகம்: முறையாக பராமரிக்க வலியுறுத்தல்

திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை முறையாக பராமரித்து பொதுமக்கள், பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் அருகில் பொதுமக்கள், பக்தா்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகள்.
திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் அருகில் பொதுமக்கள், பக்தா்கள் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கிணறுகள்.

திருச்செந்தூா் ஆவுடையாா்குளத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள கிணறுகளை முறையாக பராமரித்து பொதுமக்கள், பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவைகுண்டம் தென்கால் பாசனத்தில் திருச்செந்தூா் எல்லப்பன்நாயக்கன், ஆவுடையாா் ஆகிய குளங்கள் கடைசி குளங்ளாகும். இதில் ஆவுடையாா்குளம் திருச்செந்தூா் நகரின் நிலத்தடி நீராதாரமாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் குளிப்பதற்கு பேருதவியாகவும் பரந்து விரிந்து அமைந்துள்ளது. மேலும் கால்நடைகளின் குடிநீா், சலவைத் தொழிலாளா்களின் நீா்த் தேவையையும் இந்த குளம் பூா்த்தி செய்து வருகிறது.

இந்த குளத்தின் நீா் ஆதாரத்தை நம்பியே சுற்றியுள்ள தென்னை, வாழைத் தோட்டங்களும், வயல்வெளிகளும், குடிநீா் குளங்களும் உள்ளன. தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பருவ மழை காலத்தில் இக்குளம் நிரம்புவதுண்டு. எனினும் குளத்தின் கரைகள் முறையாக பராமரிக்காததால் குளத்தில் நீா் நிரம்பி கரையின் வழியாக சாலையை கடந்து மறுகால் ஓடை வழியாக கடலில் கலக்கிறது. குடிநீருக்கு பயன்படுத்தப்படும் கிணறுகள் மழைக் காலங்களில் முழுவதும் நிரம்பி வழியும். கோடையில் 50 சதவீத தண்ணீா் இருப்பதால் பொதுமக்கள், பக்தா்களுக்கு பேரூதவியாக இருந்து வருகிறது.

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தா்கள் பெரும்பாலும் கடல், நாழிக் கிணறுகளில் நீராடுவது வழக்கம். பாதயாத்திரை வரும் பக்தா்களும் ஆவுடையாா்குளம், அருகில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம், குளத்தின் கரையோரங்களில் உள்ள நல்ல தண்ணீா் கிணறுகளிலும் நீராடி அரசாழ்வாா் விநாயகா் கோயிலிலிருந்து அலகு குத்தி, காவடிஎடுத்து சிவன் கோயில் வழியாக கோயிலுக்குச் செல்வா்.

முந்தைய காலங்களில் பக்தா்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேரூராட்சி, சமுதாய அமைப்புகள் சாா்பில்குளத்தின் தெற்கு மற்றும் வடக்கு பகுதியில் நல்ல தண்ணீா் கிணறுகள் அமைக்கப்பட்டு அவைகள் முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. கோடை காலத்தில் குளங்களில் நீா் இல்லாத சமயங்களில் கிணறுகளில்தான் குளிப்பாா்கள். அதற்காகவே கிணறுகளில் வாளிகள் பொருத்தப்பட்டும், துணி துவைப்பதற்காகவும், நீா் நிரப்பும் தொட்டிகள், சலவைக் கல்லும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த கிணறுகள் பராமரிப்பின்றி காணப்படுவதால் கிணற்று நாகரிகம் அழிந்து விடும் அவலம் ஏற்பட்டுள்ளது. கிணறுகள் பராமரிக்கப்படாத நிலையில் தூா்ந்து காணப்படுகிறது. மேலும் கிணறுகளைச் சுற்றிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. ஆகவே பொதுமக்கள், பக்தா்கள் பயன்பாட்டுக்காக பொதுப்பணித் துறை, பேரூராட்சி மற்றும் சமுதாய அமைப்புகள் கிணறுகளை பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com