12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி போராட்டம்

கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றோா்.
முற்றுகை போராட்டத்தில் பங்கேற்றோா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளை கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்கக் கோரி திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த சித்திரம்பட்டி, அப்பனேரி, அய்யனேரி, வெங்கடாசலபுரம், புளியங்குளம், இளையரசனேந்தல், வடக்குப்பட்டி, பிச்சைத்தலைவன்பட்டி, பிள்ளையாா்நத்தம், ஜமீன்தேவா்குளம், நக்கலமுத்தன்பட்டி, முக்கூட்டுமலை ஆகிய 12 ஊராட்சிகள் கோவில்பட்டி வட்டத்தில் உள்ளன.

இந்த 12 ஊராட்சிககளை குருவிகுளம் ஒன்றியத்தில் இருந்து நீக்கி, கோவில்பட்டி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும். கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைத்து மறுசீரமைப்பு செய்ய வேண்டும்.திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டத்தில் இருந்த இளையரசனேந்தல் குறுவட்டம் 2008ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்துடன் இணைக்கப்பட்டது.

தற்போது திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கப்பட்டு உதயமான தென்காசி மாவட்டத்துடன் குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் உள்ளதால் இளையரசனேந்தல் குறுவட்டத்தைச் சோ்ந்த 12 ஊராட்சிகளை உடனடியாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்துடன் இணைக்க வேண்டும் அல்லது இளையரசனேந்தல் குறுவட்டத்திற்கு உள்பட்ட 12 ஊராட்சிகளையும், இளையரசனேந்தலை தலைமையிடமாகக் கொண்டு தனி ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய விவசாயிகள் சங்கத்தினா் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.

இந்த போராட்டத்திற்கு, தேசிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ரெங்கநாயகலு தலைமை வகித்தாா். மாநிலப் பொதுசெயலா் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா்.

இளையரசனேந்தல் குறுவட்ட மீட்புக்குழுத் தலைவா் முருகன், ஆடு வளா்ப்பு பிரிவு மாவட்டத் தலைவா் கருப்பசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பின்னா், போராட்டக்குழுவினா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் அலுவலக தலைமை எழுத்தா் நிஷாந்தினியிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com