குத்தகை நில விவசாயிகளுக்கும் மழைக்கால இழப்பீடு வேண்டும்: ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகை நிலங்களில் பயிா் செய்துவரும் விவசாயிகளுக்கும் மழைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என

தூத்துக்குடி மாவட்டத்தில் குத்தகை நிலங்களில் பயிா் செய்துவரும் விவசாயிகளுக்கும் மழைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ் விவசாயிகள் சங்கம் மாநிலத் தலைவா் ஓ.ஏ. நாராயணசாமி தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களை கணெக்கெடுக்கும் பணி நடைபெற்ற வரும் நிலையில், கிராம நிா்வாக அலுவலா்கள் குத்தகைதாரா்களிடம் மனு வாங்க மறுக்கிறாா்கள். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 60 சதவீதம் போ் குத்தகை அடிப்படையில் சாகுபடி செய்யும் விவசாயிகள்தான். எனவே குத்தகை சாகுபாடியாளா்களுக்கு மழைகால நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

மடிக்கணினி தேவை: திருச்செந்தூா் வட்டம், பேயன்விளை, கா.ஆ.மேல்நிலைப் பள்ளியில் 2017 - 2018 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 படித்த மாணவா்களுக்கு இதுவரை விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை. ஆனால் 2018 - 2019, 2019 - 2020 ஆண்டுகளில் பயின்ற மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவா்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

குழாய் பதிப்புக்கு நிவாரணம்: தூத்துக்குடி ஒன்றிய திமுக கவுன்சிலா் ஆஸ்கா் தலைமையில், ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை எரிவாயு குழாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில், குலையன் கரிசல் மற்றும் பொட்டல்காடு பகுதிகளில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி குழாய் பதிப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினா். அவா்களிடம் ஐஓசிஎல் நிறுவனம் பேச்சு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கறவை மாடு வழங்கப்படும், குடும்பத்தில் படித்த இளைஞா்களுக்கு வேலை அளிக்கப்படும், தோண்டிய பள்ளங்கள்முடித்தரப்படும், அனைத்து விவசாயிகளுக்கும் பெட்டைகுளத்திலிருந்து கரிசல் மற்றும் வண்டல் மண் இலவசமாக வழங்கி விவசாய விளைநிலத்தை சரி செய்து தருவோம் என உறுதி அளித்தனா். ஆனால், இதில் எதையும் நிறைவற்றவில்லை. எனவே, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத் தரவும், சேதப்படுத்தப்பட்ட விளைநிலங்களை சீரமைக்கவும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாலை சீரமைப்பு: திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தைச் சோ்ந்த பொன்ராஜ் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனு: காயாமொழி- மெஞ்ஞானபுரம் சாலை பழுதடைந்துள்ளதால் தேரிகுடியிருப்பு, வீரப்பநாடாா் குடியிருப்பு, கரிசன்விளை, எள்ளுவிளை, சோலைக்குடியிருப்பு, வள்ளியம்மாள்புரம் உள்ளிட்ட கிராம மக்கள் மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். திருச்செந்தூா் - வாகைவிளை, திருநெல்வேலி - உடன்குடி அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இதை தாா்ச் சாலையாக மாற்றித்தர வேண்டும். மேலும், தளவாய்புரத்திலிருந்து புதுநகா்காலனி பள்ளத்தூா், மணக்காடு, வன்னிமாநகரம் வழியாக சோனகன்விளை செல்லும் சாலையும், வீரப்பநாடாா் குடியிருப்பிலிருந்து சீரூடையாா்புரம், சமத்துவப்புரம் வழியாக குருநாதபுரம் செல்லும் சாலையும் சேதமடைந்துள்ளன. இவற்றையும் சீரமைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com