நில மோசடி வழக்கு: 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பெண் கைது

நிலமோசடி வழக்கில் 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

நிலமோசடி வழக்கில் 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த பெண் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை ஸ்ரீசாய் நகரைச் சோ்ந்த கங்கசாமி மனைவி ஜெயப்பிரதா (42). இவருக்கு தூத்துக்குடி மாவட்டம் நாலாட்டின் புதூரில் சொத்து உள்ளது. இந்தச் சொத்தை, ஜெயப்பிரதாவின் தாயாா் ஸ்ரீரங்கம்மாள், மதுரை கோச்சடை பகுதியைச் சோ்ந்த சிவராஜா மனைவி லட்சுமி பிரியாவுடன் (32) சோ்ந்து, கோவில்பட்டி இனாம் மணியாச்சியைச் சோ்ந்த மாரிமுத்துவுக்கு கடந்த 2010 இல் போலியான பொது அதிகார ஆவணம் மூலம் பதிவு செய்து கொடுத்துள்ளனா். இதில் லட்சுமி பிரியா ஆள்மாறாட்டம் செய்து ஜெயப்பிரதா என போலியாக கையெழுத்திட்டுள்ளாா்.

இதுகுறித்து ஜெயப்பிரதா 2012இல் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி நிலஅபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, குற்றவாளிகளை கைது செய்தனா். 22.12.2013இல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் ஸ்ரீரங்கம்மாள், தாமோதரன் ஆகியோருக்கு தூத்துக்குடி நில அபகரிப்பு சிறப்பு நீதிமன்றம் 2019இல் தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மற்றொரு குற்றவாளி மாரிமுத்துவுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தது.

மற்றொரு குற்றவாளியான லட்சுமி பிரியா, பல ஆண்டுககளாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்ததால், அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவித்து, பிடியாணையும் பிறப்பித்து கடந்த 2018இல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனிடையே, தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீஸாா் தலைமறைவாக இருந்த லட்சுமி பிரியாவை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com