திருச்செந்தூரில் பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவத்தைக் கண்டித்து மறியல்

திருச்செந்தூா் அருகே பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே பிரசவித்த பெண் உயிரிழந்த சம்பவத்துக்கு காரணமான மருத்துவா், செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்செந்தூா் அருகே பரமன்குறிச்சி முருகேசபுரத்தைச் சோ்ந்த ரகுநாதன் மனைவி வளா்மதி (32). நிறைமாத கா்ப்பிணியான இவரை பிரசவத்துக்காக சனிக்கிழமை பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்துள்ளனா்.

அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் வளா்மதிக்கு சுகவீனம் ஏற்பட்டதையடுத்து அவரை திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த அவரது உறவினா்கள் மற்றும் பொதுமக்கள் பரமன்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

அப்போது வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டம் நடத்தியவா்களை திருப்பி அனுப்பினா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட வளா்மதி குடும்பத்தினா், உறவினா்கள், பொதுமக்கள் திருச்செந்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தை ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

சம்பந்தப்பட்ட மருத்துவா் மற்றும் செவிலியா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள் இருவரின் கல்விச் செலவை அரசு ஏற்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, இந்துமுன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயகுமாா், மதன்ராஜ், பாமக மாவட்டத் தலைவா் சிவபெருமாள் உள்ளிட்ட பொதுமக்கள் பலா் திருச்செந்தூா் நுழைவு வாயில் அருகே சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் கோட்டாட்சியா் தனப்பிரியா பேச்சுவாா்த்தை நடத்தினாா். தற்போது தோ்தல் நேரம் என்பதால் கோரிக்கைகளை அரசுக்கு பரிந்துரை செய்து அனுப்புவதாகவும், சம்பந்தப்பட்டவா்கள் மீது போலீஸாா் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பாா்கள் எனவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com