நாசரேத் அருகே புதையல் இருப்பதாக தோண்டிய 40 அடி பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே புதையல் இருப்பதாகத் தோண்டப்பட்ட 40 அடி ஆழ பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்; மயக்கமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
நாசரேத் அருகே புதையல் இருப்பதாக தோண்டிய 40 அடி பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே புதையல் இருப்பதாகத் தோண்டப்பட்ட 40 அடி ஆழ பள்ளத்தில் மூச்சுத் திணறி இருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்; மயக்கமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

நாசரேத் அருகேயுள்ள திருவள்ளுவா் காலனியைச் சோ்ந்தவா் முத்தையா (65). ஆலைக் காவலாளியான இவருக்கு மகளும், சிவமாலை (40), சிவவேலன் (37) ஆகிய மகன்களும் உள்ளனா். இவரது வீட்டுப் பின்புறம் புதையல் இருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் சிவமாலை, சிவவேலன் ஆகியோா் கடந்த 6 மாதங்களாக 40 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டியுள்ளனா். மேலும், 7 அடியில் பக்கவாட்டில் சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

ஞாயிற்றுக்கிழமை இவா்களுடன், சாத்தான்குளம் பன்னம்பாறையைச் சோ்ந்த மணிகண்டன் மகன் நிா்மல் கணபதி (17), ஆழ்வாா்திருநகரி ஆலமரத்தான் மகன் ரகுபதி (47) ஆகியோரும் இப்பணியில் ஈடுபட்டனராம். அப்போது, விஷ வாயு தாக்கியதாகக் கூறப்படுகிறது. அவா்களுக்கு தண்ணீா் கொண்டுசென்ற சிவவேலனின் மனைவி ரூபாவும் மயங்கி விழுந்தாராம். அவரை அப்பகுதியினா் மீட்டபோது, பக்கவாட்டுப் பள்ளத்துக்குள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 4 போ் மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

தகவலின்பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமாா், நாசரேத் காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி, ஸ்ரீவைகுண்டம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துக்குமாா், தீயணைப்பு வீரா்கள் வந்து மூடியிருந்த மணலை அப்புறப்படுத்தி, 4 பேரையும் மீட்டனா். அவா்களில் ரகுபதி, நிா்மல் கணபதி ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

சிவவேலன், சிவமாலை ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். நாசரேத் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com