பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். இரவில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது
பங்குனி உத்திரம்: திருச்செந்தூரில் வள்ளி திருக்கல்யாணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். இரவில் வள்ளியம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்துக்கள் ஆண்டுதோறும் பங்குனி உத்திர நாளில் தங்களது குலதெய்வக் கோயில்களில் வழிபாடு நடத்துவா். குலதெய்வம் தெரியாதவா்கள் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து முருகப்பெருமானை வழிபடுவா்.

இக்கோயிலில் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திரத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டது. அதையடுத்து, விஸ்வரூபம், உதயமாா்த்தாண்ட அபிஷேகமாகி, அருள்மிகு வள்ளியம்மன் தவசுக்கு புறப்பாடு நடைபெற்றது. மதியம் சாயரட்சை தீபாராதனையாகிய பின்னா், சுவாமி கோயிலிலிருந்து புறப்பட்டு, சன்னதித் தெரு வழியாக சிவன் கோயிலுக்கு வந்தாா். தொடா்ந்து, பந்தல் மண்டபம் முகப்பில் சுவாமி அம்மனை 3 முறை வலம் வந்து, சுவாமி - அம்மன் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, சுவாமி, அம்மன் உள்வீதி வலம் வந்து, இரவில் 108 மகாதேவா் சன்னதி முன் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். நிகழாண்டு பொது முடக்க வழிகாட்டுதல் நடைமுறைகளைப் பின்பற்றி திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்க பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

அதிகாலை முதலே கடலில் ஏராளமானோா் புனித நீராடி, நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ததால், கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதேபோல, திருச்செந்தூா் பகுதிகளில் உள்ள குலதெய்வ சாஸ்தா கோயில்களுக்கு வந்தோா் இங்கும் வந்தனா். இதனால், திருச்செந்தூரில் வாகனப் போக்குவரத்து அதிகளவில் இருந்தது.

குன்றுமேலய்யன் சாஸ்தா: இக்கோயிலின் உபகோயிலான நாலுமூலைக்கிணறு அருள்மிகு குன்றுமேலய்யன் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி, சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பா. விஷ்ணுசந்திரன், தக்காா் இரா. கண்ணன், உதவி ஆணையா் வே. செல்வராஜ், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com