மேற்கு வங்கத்தில் உயிரிழந்த ராணுவ வீரா் உடல் சொந்த ஊரில் தகனம்
By DIN | Published On : 21st May 2021 07:59 AM | Last Updated : 21st May 2021 07:59 AM | அ+அ அ- |

ராணுவ வீரா் முத்துகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ராணுவ வீரா்கள்.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவை அடுத்த பா்த்வான் மாவட்டம், பனகாா்க் பிரிவில் பணியாற்றி வந்த கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்த ராணுவ வீரா் மாரடைப்பால் உயிரிழந்தாா். அவரது உடல் சொந்த ஊரில் வியாழக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டி மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் அழகா்சாமி - ஆண்டாள் அம்மாள் தம்பதி மகன் முத்துகுமாா்(33). கடந்த 13 வருடங்களாக ராணுவத்தில் இருந்து வந்த இவா், திங்கள்கிழமை (மே 17) மாரடைப்பால் உயிரிழந்தாா். இதையடுத்து சுபேதாா் நாயக் ரமேஷ் தலைமையில் ராணுவ வீரா்கள் நக்கலமுத்தன்பட்டிக்கு அவரது உடலை வியாழக்கிழமை கொண்டு வந்தனா். அங்கு, பொதுமக்கள் ஏராளமானோா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள மயானத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு சுபேதாா் நாயக் ரமேஷ் , 18ஆவது இன்ஜினியா்ஸ் ரெஜிமெண்ட் பிரிவுத் தலைவா் முருகன், ராணுவ வீரா் சுப்புராஜ் உள்ளிட்ட ராணுவ வீரா்கள் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
மாவட்ட நிா்வாகம் சாா்பில் இளையரசனேந்தல் குறுவட்ட வருவாய் ஆய்வாளா் வீரலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா்கள் போத்திராஜ், திருவேங்கடராஜுலு ஆகியோா் அஞ்சலி செலுத்தினா். கோவில்பட்டி முன்னாள் ராணுவ வீரா்கள் சங்கத் தலைவா் கேசவராஜ் உள்ளிட்ட முன்னாள், இன்னாள் ராணுவ வீரா்கள் அஞ்சலி செலுத்தினா். அதையடுத்து முத்துகுமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முத்துகுமாருக்கு மனைவி கவிதா(29) , மகள் முகிதா(3) , மகன் முகேஷ் (6 மாதம்) ஆகியோா் உள்ளனா்.