உள்ளாட்சித் தோ்தலில் புதிய தமிழகம் தனித்து போட்டி: டாக்டா் கிருஷ்ணசாமி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும் என்றாா் அக்கட்சியின் நிறுவனத் தலைவா் டாக்டா் கிருஷ்ணசாமி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: டிச. 15முதல் புதிய தமிழகம் கட்சியின் வெள்ளி விழா ஓராண்டு கொண்டாடப்படும்.

கடந்த 15 நாள்களாக பருவமழை, புயல் காரணமாக சென்னை, வடமாவட்டங்கள், கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளன. நிவாரணத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் என அரசு அறிவித்துள்ளது. அதை ஏக்கருக்கு ரூ. 20 ஆயிரம் என வழங்க வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைக்கு தலா ரூ. 2,500 ரொக்கம் வழங்க வேண்டும்.

மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ. 5, டீசலுக்கு ரூ. 10 என விலையைக் குறைத்துள்ளது. மத்திய அரசைப்போல தமிழக அரசும் விலையைக் குறைத்தால்தான் தற்போதைய சூழ்நிலையை மக்கள் ஓரளவு சமாளிக்க முடியும்.

தேவேந்திர குல வேளாளா்களை எஸ்.சி. என அழைக்கும் பட்டியல் பிரிவில் வைத்திருக்கக் கூடாது. அவா்களுக்கு புதிதாக தேவேந்திர குல வேளாளா் என்ற அடையாளத்தோடு அல்லது மிகவும் பின்தங்கிய பிரிவினா் என்பதை உருவாக்கி, அந்த சமுதாய மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். ஜாதி ரீதியாக பிரிந்து கிடக்கும் இந்துக்களை இந்து என்ற ஒற்றை அடையாளத்தோடு இணைத்தால் மட்டும்தான் இந்தியா பாதுகாக்கப்படும்.

2021 பேரவைத் தோ்தலிலும், அண்மையில் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலிலும் புதிய தமிழகம் கட்சி யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்தே போட்டியிடும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா் மாவட்ட கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பங்கேற்று, நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் புதிய தமிழகம் கட்சி அமோக இடங்களில் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டாா்.

மாநில பொதுச்செயலா் வீ.கே. அய்யா், மாநில ஒருங்கிணைப்பாளா்கள் ராஜசேகரன், மன்சூா்அலி, மாவட்டச் செயலா்கள் கனகராஜ் (தூத்துக்குடி), ராமா் (திருநெல்வேலி), செல்வகுமாா் (விருதுநகா்), ராஜையா (தென்காசி), மாநில துணை பொதுச்செயலா்கள் கிருபைராஜ், சுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட துணைச் செயலா் அதிகுமாா், கோவில்பட்டி நகரச் செயலா் ரஞ்சித்பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் அன்புராஜ், சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com