எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கிராமசபையில் தீர்மானங்கள்: த.ஜெயராமன் வலியுறுத்தல்

வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த அக்.2-இல் கிராமசபைத் தீர்மானங்களை இயற்றுங்கள் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன்
எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களுக்கு எதிராக கிராமசபையில் தீர்மானங்கள்: த.ஜெயராமன் வலியுறுத்தல்

வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களை தடுத்து நிறுத்த அக்.2-இல் கிராமசபைத் தீர்மானங்களை இயற்றுங்கள் என மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியது: தமிழகத்தின் காவிரிப்படுகையும், கடலோரக் கிராமங்களும், ராமநாதபுரம், சிவகங்கை, அரியலூர் மாவட்டங்களும் வரைமுறையற்ற எண்ணெய்-எரிவாயுத் திட்டங்களாலும், எரிவாயுக் குழாய்ப் பதிப்பாலும் ஒட்டுமொத்த அழிப்புக்கு உள்ளாக இருக்கின்றன. மரக்காணத்தில் இருந்து நாகை மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் வரை கடற்பகுதியிலும் எண்ணெய்-எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க எண்ணெய் நிறுவனங்கள் ஏலம் எடுத்துவிட்டு காத்திருக்கின்றன. எனவே, இத்திட்டங்களைத் தடுத்து நிறுத்த கிராமசபைத் தீர்மானங்களை அக்டோபர் 2-இல் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தவறாமல் நிறைவேற்றுங்கள்.

எண்ணூரிலிருந்து தூத்துக்குடி வரை கார்ப்பரேட் நிறுவனங்களின் தேவைக்காகப்  எண்ணெய்க் குழாய் பதிப்பு 7 மாவட்டங்களில் 14 வட்டங்களில் 77 ஊர்களின் வயல்பகுதிகளில் குழாய்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதை நாம் அனுமதிகக்கூடாது. உங்கள் தலைமுறையினர் நமது சொந்தக் கிராமங்களில் தொடர்ந்து வாழ, தமிழக நெற்களஞ்சியமாகிய காவிரிப்படுகையில் வேளாண்மை தொடர, கடலோரக் கிராமங்கள் நிலம் தாழ்ந்து கடலுக்குள் அமிழ்ந்து போகாமல் தடுக்க, பாரம்பரிய மீன்பிடித்தொழில் தொடர இத்தீர்மானங்களை இயற்றுவது அவசியம். இத்தீர்மானங்களையோ, இதையொத்த தீர்மானங்களையோ, தவறாமல் நிறைவேற்றுங்கள். 

1.நமது கிராமம் ஒரு வேளாண்மை கிராமம் ஆகும். நம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், விளைநிலம், பொது நிலம், தனியார் நிலம் எதுவாக இருந்தாலும், அதில் எண்ணெய்-எரிவாயு எடுப்பதற்கான கிணறுகளையோ, எண்ணெய் - எரிவாயு எடுத்துச் செல்லும் குழாய்களையோ அமைக்க, எந்தப் பெயரில் அத்திட்டம் கொண்டுவரப்பட்டாலும், அந்நிறுவனம் அரசு நிறுவனம் ஆனாலும் அல்லது தனியார் நிறுவனம் ஆனாலும், அனுமதிப்பது இல்லை என்றும், நம் கிராமத்தின் உழவுச் சூழல் தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும் என்பதால், உழவுச் சூழலைப் பாதிக்கின்ற, சுற்றுச்சூழலைப் பாதிக்கின்ற வேறு எந்த தொழிலகங்களையும் அனுமதிப்பதில்லை என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

2. நம் உணவுக் களஞ்சியமும், நம் வரலாற்று வழி வேளாண்மண்டலமும் ஆகிய, காவிரிப் படுகையைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், வேளாண்மை மட்டுமே இங்கு நடக்க வேண்டும் என்பதே நம் கிராமத்தின் நிலைப்பாடு என்று தீர்மானிக்கப்படுகிறது. 3. விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும் வகையில், நீர்வாய்க்கால்களின் நீர்போக்கை தடுக்கும் வகையிலும், வயல் மற்றும் தோட்டங்களில் விவசாய எந்திரங்கள் பயன்படுத்த முடியாத வகையிலும், தேவையான ஆழ்துளை தண்ணீர் குழாய்க் கிணறு, கான்கிரீட் கட்டிடங்கள் அமைத்துக்கொள்ள முடியாதபடியும், கிடைமட்ட எண்ணெய் - எரிவாயுக் குழாய்களை அமைக்கும் பணிகளை நமது கிராமத்தில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது.
 
4. விவசாயத்தைப் பாதிக்கும் வகையில், நம் ஊரின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரின் ஒப்புதலைப் பெறாத பாரத்மாலா திட்டத்தின் படியான சாலைகள், பெட்ரோ - கெமிக்கல் தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், சுற்றுச்சூழலையும வாழ்வுச் சூழலையும் பாதிக்கும் தொழிலகங்கள் ஆகியவற்றை அமைக்க அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. 5. காவிரிப் படுகையில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களையும், கடலூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் ஒரு பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக  அறிவித்து தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது. காவிரிப் படுகை முழுவதும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலப் பகுதிக்குள் சேர்க்கப்பட வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது.

6. எங்கள் கிராமத்தைச் சேர்ந்த கடற்பகுதியில் எண்ணெய் - எரிவாயு ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பது எங்களுடைய மீன்பிடித்தொழிலையும், மீன் வளத்தையும் முற்றிலும் பாதித்துவிடும்.  ஆகவே, எங்கள் பகுதியை ஒட்டியுள்ள ஆழமற்ற மற்றும் ஆழமான கடற்பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதை அனுமதிக்க முடியாது எனத் தீர்மானிக்கப்படுகிறது. தமிழகத்தையொட்டிய கடற்பரப்பில் ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்கத் தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது. 7. கிராமப் பொருளாதாரத்தை முற்றிலும் பறித்துவிடக் கூடிய, ஒப்பந்த விவசாயம் என்ற பெயரில் உள்ளுர் விவசாயத்தை கார்ப்பரேட்டு முதலாளிகளிட ஒப்படைக்கிற, விவசாயம், விவசாயி, விவசாயக்கூலிகள் அனைவரையும் பாதிக்கிற, வேளாண் சட்டங்கள் மூன்றையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் இயற்றப்படுகிறது.

ஒப்பந்த விவசாயத்தை நம் ஊரில் அனுமதிப்பதில்லை என்று தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com