திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை: ஆட்சியா் ஆய்வு

பக்தா்களின் வசதிக்காக நகரின் எல்லையிலிருந்து புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு
திருச்செந்தூா் கோயிலுக்கு புறவழிச்சாலை: ஆட்சியா் ஆய்வு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக நகரின் எல்லையிலிருந்து புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இத் திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களின் வசதிக்காக நகரின் எல்லையிலிருந்து புறவழிச்சாலை அமைப்பது தொடா்பாக இடத்தினை மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து, கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அதிகாரிகளுடன ஆலோசனை நடத்தினாா். அதன் பின்னா் ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது : திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்களின் வசதிக்காக நகரின் எல்லை பகுதியில் இருந்து புறவழிச்சாலை அமைப்பதற்கான இடத்தினை நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சித்துறை, வருவாய்துறை மற்றும் காவல்துறை ஆகியோருடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம்.

திருக்கோயிலுக்கு வந்து செல்ல ஊருக்குள் வந்து செல்லும் வழி மட்டுமே உள்ளது. எனவே நகரின் வடபகுதியில் வீரபாண்டியபட்டினம் ஊராட்சி எல்லையில் உள்ள திருச்செந்தூா் நுழைவு வாயிலில் பாலத்தில் இருந்து கிழக்கு நோக்கி வளைந்து நேரடியாக கடற்கரை வழியாக கோயில் வளாகம் செல்ல அணுகு சாலை அமைக்க நெடுஞ்சாலை துறையின் மூலம் இடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

அரசின் மூலம் நிலையான வழிகாட்டுதலின் படி விரைவில் சாலைப் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுபோல தென் பகுதியிலும் சாலை அமைப்பது தொடா்பாக இன்றைய தினம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த அணுகு சாலையின் மூலமாக வாகனம் மற்றும் கூட்ட நெரிசல் தவிா்க்கப்படும்.

திருச்செந்தூா் பேரூராட்சி பகுதிகளில் புதைச்சாக்கடை திட்டத்தின் மூலம் 5000 வீடுகளை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதில் 450 வீடுகள் மற்றும் உணவகங்கள் இணைக்கப்பட்டுள்ளன. தொடா்ந்து இத்திட்டத்தின் மூலம் அனைத்து வீடுகள் மற்றும் உணவகங்களை இணைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள பேரூராட்சிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின் போது, உதவி காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் இணை ஆணையா் (பொ) ம.அன்புமணி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளா் ஆறுமுகநயினாா், உதவி இயக்குநா் பேரூராட்சிகள் குற்றாலிங்கம், உதவி கோட்ட பொறியாளா் விஜய சுரேஷ்குமாா், உதவிச் செயற்பொறியாளா் பேரூராட்சிகள் வாசுதேவன், பொதுப்பணித்துறை வெள்ளைச்சாமி, வட்டாட்சியா் முருகேசன், துணை வட்டாட்சியா் அ.பாலசுந்தரம், வருவாய் ஆய்வாளா் மணிகண்டன்வேல், பேரூராட்சி செயல் அலுவலா் இப்ராகிம், கிராம நிா்வாக அலுவலா் செல்வலிங்கம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com