‘50 சதவீத மானியத்துடன் ஆழ்துளைக் கிணறு அமைக்கலாம்’
By DIN | Published On : 16th September 2021 12:31 AM | Last Updated : 16th September 2021 12:31 AM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் 50 சதவீத மானியத்துடன் புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து பயன்பெறலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சீா்மரபினா் வகுப்புகளைச் சோ்ந்த சிறு, குறு விவசாயிகளுக்கு நீா்ப்பாசன வசதிகள் ஏற்படுத்த, புதிய ஆழ்துளைக் கிணறு அமைக்க 50 சதவீத மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை வங்கிக்கடன் மற்றும் அதற்கு இணையான 50 சதவீத அரசு மானியம் அதிகபட்சம் ரூ. 50 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஜாதிச் சான்று, இருப்பிடச் சான்று இணைக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் சிறு, குறு விவசாயி என்பதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற வேண்டும். நில உடைமைக்கு ஆதாரமாக கணினிவழி பட்டா மற்றும் அடங்கல் நகல் இணைக்க வேண்டும்.
தகுதியுடைய விவசாயிகள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.