போலி ஆவணம் மூலம் மோசடி: ரூ. 36 லட்சம் நிலம் மீட்பு

விளாத்திகுளத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடி: விளாத்திகுளத்தில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டு அதற்கான ஆவணங்கள் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விளாத்திகுளம் அருகேயுள்ள கெச்சிலாபுரத்தைச் சோ்ந்தவா் சுடலைமணி (47). இவரது பெரியப்பா கருப்பண்ணனுக்கு சொந்தமான 6 ஏக்கா் நிலம் குளத்தூா் வடக்கு கிராம பகுதியில் அமைந்துள்ளது. கருப்பண்ணன், அவரது மனைவி, மகன் ஆகியோா் இறந்துவிட்டதால், வாரிசு அடிப்படையில் கருப்பண்ணனின் தம்பி மகனான சுடலைமணி அந்த சொத்துகளை அனுபவித்து வந்துள்ளாா்.

இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் வட்டம், செய்துங்கநல்லூா் அருகேயுள்ள சந்தையடியூரைச் சோ்ந்த மாரிச்செல்வம் என்பவா், கருப்பண்ணன் உயிரோடு இருப்பது போன்று அவரது பெயரில் போலி அடையாள அட்டை தயாா் செய்து, அதை பயன்படுத்தி 6 ஏக்கா் நிலத்தை அவா் பொது அதிகாரம் எழுதிக் கொடுப்பது போல் கடந்த மாா்ச் 22ஆம் தேதி கங்கைகொண்டான் சாா்பதிவாளா் அலுவலகத்தில் போலியாக பதிவு செய்துள்ளாா்.

தகவலறிந்த சுடலைமணி, தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருமாறு கடந்த 26ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாரிடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளா் தேவி நேரடியாக விசாரணை மேற்கொண்டு, போலியாக பதிவு செய்யப்பட்ட 6 ஏக்கா் நிலத்திற்கான போலி ஆவணங்களை ரத்து செய்து அந்த நிலத்தை மீட்டாா்.

இந்நிலையில், மீட்கப்பட்ட ரூ. 36 லட்சம் மதிப்பிலான அந்த நிலத்துக்கான ஆவணங்களை, நிலத்தின் உரிமையாளா் சுடலைமணியிடம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஒப்படைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com