திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே மோதல் போலீஸாா் குவிப்பு

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில், 5 போலீஸாா் உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா்.

திருச்செந்தூரில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் வீடுகள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில், 5 போலீஸாா் உள்ளிட்ட 8 போ் காயமடைந்தனா்.

திருச்செந்தூா் கரம்பவிளையில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழா கடந்த 9ஆம் தேதியும், மறுநாள் முளைப்பாரி ஊா்வலமும் நடைபெற்றது. இந்த ஊா்வலத்தின்போது இரு தரப்பினிடையே மோதல் ஏற்பட்டது. போலீஸாா் அழைத்துப் பேசியதில் இரு தரப்பினரும் சமாதானமடைந்தனா்.

இந்நிலையில், இக்கோயிலில் சனிக்கிழமை இரவு சிறுவா்களின் கலைநிகழ்ச்சி நடந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள மாட்டுத் தொழுவத்தில் மா்ம நபா்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் தீ வேகமாகப் பரவியது. தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா்.

இந்தச் சூழ்நிலையில், இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்டது. கற்களை வீசித் தாக்கிக்கொண்டனா். இதில், பாதுகாப்புப் பணியிலிருந்த ஆறுமுகனேரி போலீஸ் இன்ஸ்பெக்டா் செந்தில், திருச்செந்தூா் மகளிா் சப்-இன்ஸ்பெக்டா் மேரி, போலீஸாா் பால்பாண்டி, ஆனந்தபேச்சி, வால்டா் ஆகியோா் காயமடைந்தனா். மேலும், அதே ஊரைச் சோ்ந்த மணிகண்டன் (22), அன்புசெல்வம் (10), தோப்பூரைச் சோ்ந்த காட்டுராஜா (56) ஆகியோரும் காயமடைந்தனா்; போலீஸ் வாகனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள், சில வீடுகள் சேதமடைந்தன.

இதையடுத்து, அப்பகுதிகளில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக 13 பேரை திருச்செந்தூா் கோயில் போலீஸாா் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com