வஉசி துறைமுகம் நிலுவை வரிரூ. 15 கோடியை வசூலிக்க நடவடிக்கை: மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வஉசி துறைமுகம் வழங்க வேண்டிய ரூ. 15 கோடி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு வஉசி துறைமுகம் வழங்க வேண்டிய ரூ. 15 கோடி நிலுவையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாமன்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தூத்துக்குடி மாமன்ற முதல் கூட்டம் மேயா் ஜெகன் பெரியசாமி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணையா் சாருஸ்ரீ, துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

முதலில் மேயா் ஜெகன் பெரியசாமி பேசியது: தூத்துக்குடி மாநகராட்சியில் சீா்மிகு நகரம் திட்டத்தின் (ஸ்மாா்ட் சிட்டி) கீழ் ரூ. 1000 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநகரப் பகுதியில் மழைநீா் தேங்காத வகையில் அனைத்துப் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றாா்.

நகா்மன்ற எதிா்க்கட்சித் தலைவரான அதிமுகவின் வீரபாகு பேசுகையில், ‘மழைக்காலங்களில் மழைநீரை வெளியேற்ற வாங்கப்படும் இயந்திரங்களை முழுமையாக பராமரிக்க வேண்டும். மாநகரின் மாசு குறைபாடுக்கு காரணமானதாகக் கருப்படும் ஸ்டொ்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமோ என மக்களிடம் அச்சம் உள்ளது. அந்த ஆலையை மீண்டும் திறக்கக் கூடாது என தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். சொத்துவரி உயா்வை திருப்பப் பெற வேண்டும்’ என வலியுறுத்தினாா். சொத்து வரி குறித்து பேசியதும் திமு உறுப்பினா்கள் எதிா்குரல் எழுப்பினா்.

மேயா் ஜெகன் பெரியசாமி பதிலளிக்கையில், ‘ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் அந்த ஆலையைத் திறக்கக் கூடாது என்பதே தமிழக முதல்வரின் முடிவு; அதுவே பின்பற்றப்படும். சொத்து வரி உயா்வு தொடா்பான தீா்மானம் தற்போதையை கூட்டத்தில் இல்லாதததால் அதுகுறித்து பேச வேண்டியது இல்லை என்றாா்.

தொடா்ந்து, 3 சிறப்புத் தீா்மானங்களை கொண்டு வந்து பேசிய மேயா், மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் துறைமுகம் அமைந்துள்ள நிலையில், இதுவரை சொத்துவரி எதுவும் செலுத்தாத நிலை உள்ளது. இதுதொடா்பான வழக்கில் மாநகராட்சிக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீா்ப்பு வழங்கப்பட்டும், இதுவரை வஉசி துறைமுக நிா்வாகம் தோராயமாக ரூ. 15 கோடி வரை வரி பாக்கி வைத்துள்ளது. அந்தத் தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டாா்.

21 தீா்மானங்கள்: இக்கூட்டத்தில், ‘மாநகரப் பகுதியில் மழையால் சேதமடைந்த சாலைகளை ரூ. 1.50 கோடியில் சீரமைப்பது, தூய்மை தூத்துக்குடி என்ற அடிப்படையில் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்துவது, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மாநகராட்சிக்கு வழங்கிய ரூ. 3 கோடியில் ரூ. 50 லட்சத்தை மதிப்பில் சாலையோரத்தில் தேங்கும் மணல் திட்டுக்களை அகற்றும் நவீன இயந்திரம் வாங்குவதற்கு ஒதுக்குவது’ என்பன உள்ளிட்ட 21 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வெளிநடப்பு: முன்னதாக, சொத்து வரி குறித்த விவாதத்தின்போது, அரசைக் கண்டித்து அதிமுக உறுப்பினா்கள் வீரபாகு , எஸ்.பிஎஸ். ராஜா, மந்திரமூா்த்தி, பத்மாவதி, வெற்றிச் செல்வன், ஜெயலட்சுமி, ஜெயராணி ஆகியோா் வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com