முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
நகைக்கடன் தள்ளுபடி கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகை
By DIN | Published On : 29th April 2022 12:00 AM | Last Updated : 29th April 2022 12:00 AM | அ+அ அ- |

வில்லிசேரி கிராம மக்கள் நகைக்கடன் தள்ளுபடி கோரி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வில்லிசேரி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் 1,392 உறுப்பினா்கள் உள்ளனா். அவா்களில் 936 போ் நகைகளை அடமானம் வைத்துள்ளனா். இதில், 343 போ் மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி பெறத் தகுதியானோா் என கடந்த மாா்ச் 23இல் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து, அனைவருக்கும் நகைக்கடனைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் மாா்ச் 24இல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுதொடா்பாக ஆட்சியரிடமும் அண்மையில் மனு வழங்கினராம். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு உறுப்பினா் பிரேம்குமாா் தலைமையில் வில்லிசேரி கிராம அலுவலகம் முன் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கயத்தாறு காவல் ஆய்வாளா் முத்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி பிரேம்குமாா் தலைமையில் வில்லிசேரி மக்கள் கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோட்டாட்சியா் சங்கரநாராயணன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதுகுறித்து ஆட்சியருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் கூறியதையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.