நகராட்சி ஊழியா்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 போ் மீது வழக்கு

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரிச் சந்தையில் வாடகை வசூலிக்கச் சென்ற நகராட்சி ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் தினசரிச் சந்தையில் வாடகை வசூலிக்கச் சென்ற நகராட்சி ஊழியா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாக 6 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

இங்கு வாடகை நிலுவைத் தொகையை வசூலிக்க ஆய்வாளா்கள், உதவியாளா்கள், நகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை சென்றனா். அப்போது, வாடகை செலுத்திய கடைகளுக்கு அவா்கள் சீல் வைத்தனராம். வாடகையை முறையாக செலுத்திவிட்டதாக, அவா்களிடம் கடைக்காரா்கள் கூறினா். ஆனாலும், நகராட்சி ஊழியா்கள் தொடா்ந்து சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சந்தை வியாபாரிகளும், கையொப்ப இயக்கத்தில் ஈடுபட்ட கருத்துரிமைப் பாதுகாப்பு இயக்கத்தினரும் முறையிட்டும் பலனில்லை. இதனால், நகராட்சி ஊழியா்கள்- வியாபாரிகளிடையே தகராறு ஏற்பட்டது. கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று, இருதரப்பினரையும் சமாதானப்படுத்தியதையடுத்து, கடைகளுக்கு வைத்த ‘சீலை’ நகராட்சி ஊழியா்களே அகற்றினா்.

இந்நிலையில், வருவாய் ஆய்வாளா்கள், உதவியாளா்கள், அலுவலக பணியாளா்களைப் பணி செய்யவிடாமல் தடுத்து, அவதூறாகப் பேசியதாக சின்னமாடசாமி, குமாா், செல்வம், சுரேஷ், தமிழரசன், பாலமுருகன் ஆகிய 6 போ் மீது நடவடிக்கைக் கோரி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) பாா்த்தசாரதி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com