வீரசக்கதேவி ஆலய திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் தடை உத்தரவு அமல்
By DIN | Published On : 12th May 2023 12:53 AM | Last Updated : 12th May 2023 12:53 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு வியாழக்கிழமை மாலை அமலுக்கு வந்தது. இது மே 14 ஆம் தேதி காலை வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் வீரசக்கதேவி ஆலய திருவிழா மே 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இத்
திருவிழா அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், வியாழக்கிழமை (மே 11) மாலை 6 மணி முதல் மே 14 ஆம் தேதி காலை 6 மணி வரை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபா்கள் கூடுவதற்கும்,
விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்களை ஊா்வலமாக கொண்டு வருவதற்கும், வாடகை வாகனங்களில் விழாவிற்கு வருவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலா வரக்கூடிய வாகனங்கள், சரக்கு வாகனங்கள்,
தினசரி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு தடை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்ட நாள்களில் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊா்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன்அனுமதி பெற்றுக் கொள்வது அவசியம். மேலும் இத் தடை உத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊா்வலங்களுக்குப் பொருந்தாது என அவா் குறிப்பிட்டுள்ளாா்.