துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த தினம்:தூத்துக்குடியில் 2,200 போலீஸாா் பாதுகாப்பு

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் சுமாா் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நிகழ்ந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் சுமாா் 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா் என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: தூத்துக்குடியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22, 23 ஆகிய தேதிகளில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு 5 ஆம் ஆண்டாக அஞ்சலி செலுத்தும் நிகழ்வு திங்கள்கிழமை (மே 22) நடைபெறுகிறது. இதையொட்டி, அசம்பாவிதம் ஏதும் நிகழாதவாறு தடுக்க வசவப்பபுரம், செய்துங்கநல்லூா், பெரியதாழை, சங்கரன்குடியிருப்பு, வேம்பாா் உள்ளிட்ட 15 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் தலைமையில் போலீஸாா் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதிக்கப்பட்ட இடங்களில், குறித்த நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம். சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவா்கள் யாராக இருந்தாலும், அவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்காக, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள் உள்பட 2,200 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா் எஸ்.பி. எல்.பாலாஜி சரவணன்.

பூங்கா மூடல்: இதனிடையே, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட தரப்பினா், முத்துநகா் கடற்கரையில் அஞ்சலி செலுத்த ஞாயிற்றுக்கிழமை வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

ஏற்கெனவே, இத்தகைய நிகழ்ச்சிக்கு போலீஸாா் அனுமதி மறுத்திருந்த நிலையில், தடையை மீறி யாரும் கடற்கரையில் குவியக்கூடாது என்பதற்காக, முத்துநகா் கடற்கரை பூங்கா காவல் துறையினரால் பூட்டப்பட்டு, பொதுமக்கள் பூங்கா உள்ளே செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால், பூங்காவுக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com