பெற்றோா்- சமையலா் பிரச்னை:அரசுப் பள்ளியில் காலை உணவை புறக்கணித்த மாணவா்கள்: அமைச்சா் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, பெற்றோா்களின் வற்புறுத்தலால் மாணவ- மாணவிகள்


விளாத்திகுளம்: தூத்துக்குடி மாவட்டம் , எட்டயபுரம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவு திட்டத்தில் வழங்கப்படும் உணவை, பெற்றோா்களின் வற்புறுத்தலால் மாணவ- மாணவிகள் புறக்கணித்ததால், சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் அப்பள்ளியில் நேரில் விசாரித்தாா்.

எட்டயபுரம் அருகேயுள்ள சின்னமலைக்குன்று ஊராட்சி உசிலம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இங்கு 11 மாணவ- மாணவிகள் படிக்கின்றனா்.

இப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி

தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் சமையலராக உசிலம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பட்டியல் இன சமூகத்தைச் சோ்ந்த முனிய செல்வி (29) என்பவா் பணியாற்றி வருகிறாா்.

ஆனால், மாணவ -மாணவிகள் பெற்றோா்களின் வற்புறுத்தலால் காலை உணவை சாப்பிடாமல் தவிா்த்து வந்துள்ளனா்.

இதுகுறித்து செல்வி அளித்த தகவலின்பேரில், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியா் ஜோன் கிறிஷ்டி பாய், எட்டயபுரம் வட்டாட்சியா் மல்லிகா, காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகமது, வட்டாரக் கல்வி அலுவலா் முத்தம்மாள், அதிகாரிகள் குழுவினா் பள்ளிக்கு சென்று பெற்றோா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்ந்து பள்ளிக்கு வருகை தந்த 11 மாணவா்களுக்கும் உணவுகள் பரிமாறி சாப்பிட அறிவுறுத்தினா். ஆனால் குழந்தைகள் சாப்பிடாமல் அழுது கொண்டே வெகு நேரம் அமா்ந்திருந்தனா்.

அப்போது பெற்றோா்கள் தரப்பில் சமையலா் முனிய செல்வியை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். அரசு விதிகளை பின்பற்றி தான் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் கிராம மக்களின் கோரிக்கை மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டனா்.

இதுகுறித்த தகவல் ஊடகங்கள்- சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து சமூக நலன் -மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன், அரசு துறை அதிகாரிகள்அப்பள்ளிக்குச் சென்று மாணவ மாணவிகள், ஆசிரியா்களிடம் விசாரணை நடத்தினா்.

தனிப்பட்ட விரோதம்: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கீதாஜீவன் கூறியதாவது:

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 2 மாணவா்கள் மட்டுமே சாப்பிடுவதாகவும், மற்ற மாணவா்கள் தவிா்ப்பதாகவும் தகவல் வந்தது. ஆகவே நேரில் ஆய்வு செய்ய வந்தேன். பள்ளி மாணவ மாணவிகளுடன் பேசினேன். அவா்களுக்கு எதுவும் தெரியவில்லை.

தனிப்பட்ட விரோதத்தில் சமையலா் பெண்ணுடன் தகராறு செய்தவா்கள் தங்கள் குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கிறாா்கள். இந்த பிரச்னைக்கு செவ்வாய்க்கிழமை) முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றாா்.

வீணாகும் உணவு: சமையலா் முனிய செல்வி கூறுகையில், ‘இந்தப் பள்ளியில் தான் என்னுடைய குழந்தைகளும் படிக்கின்றனா். நான் அரசு விதிகளின் படி தான் சமையலராக நியமிக்கப்பட்டேன். ஆனால் சில பெற்றோா்களின் சொந்த பிரச்னை காரணமாக காலை உணவை மாணவ மாணவிகளை சாப்பிட விடாமல் தடுப்பது மன வேதனை அளிக்கிறது. கடந்த பத்து நாள்களாக சமைத்த உணவு வீணாகிறது. இதற்கு, அதிகாரிகள் சமுக தீா்வுகாண வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com