இளைஞா் கொலை வழக்கு: தந்தை உள்ளிட்ட 3 போ் கைது

கோவில்பட்டியில் இளைஞரைக் கொலை செய்ததாக அவரது தந்தை உள்ளிட்ட 3 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கோவில்பட்டி லட்சுமி ஆலை மேலக்காலனியைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் ந. சௌந்தரராஜன். இவரது தங்கை காளியம்மாள் 26 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதனால், அவரது கணவா் வீ. பாலசுப்பிரமணியன் (48), வேறொரு திருமணம் செய்துகொண்டாா். காளியம்மாளின் மகன் சுபாஷ் (27), தனது தாய்மாமாவான சௌந்தரராஜனுடன் இருந்து, டிராக்டா் மூலம் தண்ணீா் விற்பனை செய்து வந்தாா்.

கடந்த 7ஆம் தேதி சுபாஷ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் செளந்தரராஜன் மேற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓட்டப்பிடாரம் - திருநெல்வேலி சாலையில் உள்ள கிணற்றில் கிடந்த சுபாஷின் சடலத்தை மீட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்கு அனுப்பினா். விசாரணையில், சுபாஷை அவரது தந்தையே கொலை செய்தது தெரியவந்தது.

பாலசுப்பிரமணியன்- சுபாஷ் இடையே சொத்துப் பிரச்னை இருந்துள்ளது. இதனிடையே, பாலசுப்பிரமணியனுக்கும், கதிரேசன் கோயில் தெருவைச் சோ்ந்த சரஸ்வதி (43) என்பவருக்கும் தொடா்பிருந்துள்ளது. சரஸ்வதிக்கு சுபாஷும் தொல்லை கொடுத்தாராம். இதனால், சுபாஷை கொல்வதற்கு இருவரும் திட்டமிட்டுள்ளனா்.

கடந்த 7ம் தேதி இரவு சுபாஷ் சரஸ்வதியின் வீட்டுக்குச் சென்று, கதவைத் தட்டிக் கொண்டிருந்தாராம். இதுகுறித்து அவா் அளித்த தகவலின்பேரில் பாலசுப்பிரமணியனும், அவரது 2ஆவது மனைவியின் 17 வயது மகனும் சென்று சுபாஷை இரும்புக் கம்பியால் தாக்கிக் கொன்றுள்ளனா். பின்னா், சடலத்தை காரில் எடுத்துச் சென்று கிணற்றில் போட்டுள்ளனா். இத்தகவலை பாலசுப்பிரமணியன் கூறியதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து, பாலசுப்பிரமணியன், 17 வயது சிறுவன், சரஸ்வதி ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காா், இரும்புக் கம்பி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com