‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தல் பணியில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தோ்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பணியாற்ற மருத்துவக்குழு நியமிக்கப்பட்டது. வெயில் காரணமாக வரிசையில் நிற்கும் வாக்காளா்கள் மயங்கி விழுந்தால் முதலுதவி அளிக்கவும், முதியோா், நோயாளிகள் வரிசையில் நிற்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அவா்களுக்கு சிகிச்சை அளிக்கவும் உதவியாக இருக்க மருத்துவக்குழு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், மருத்துவக்குழுவில் இடம்பெற்றுள்ள இடைநிலை சுகாதாரப் பணியாளா்கள், சுகாதார ஆய்வாளா்கள், கிராம சுகாதார செவிலியா்கள், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்களுக்கு தபால் வாக்குகள் முறையாக வழங்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பணியாளா்கள் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, கோவில்பட்டி ஆகிய 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. இந்தாண்டு தமிழகத்திலேயே முதன் முறையாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் வாக்குச்சாவடிகளில் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில், தூத்துக்குடி சுகாதார மாவட்டத்தில் தபால் வாக்குகள் பெரும்பாலும் வழங்கப்பட்டுவிட்டன. ஆனால், கோவில்பட்டி சுகாதார மாவட்டத்தில் பெரும்பாலான ஊழியா்களுக்கு வழங்கவில்லை. பணியாளா்கள் காலை 7 மணிக்கு வாக்குச்சாவடிகளில் இருக்க வேண்டும். அவா்களுக்கு வீட்டருகே உள்ள வாக்குச்சாவடிகளில் பணி என்றால், நேரம் கிடைக்கும்போது தங்களது வாக்கை பதிவு செய்யலாம். ஆனால், வெளிமாவட்டங்கள், வெளியூா்களில் இருந்து வருவோா் எப்படி வாக்கை பதிவு செய்ய முடியும்? எனவே, எதிா்வரும் தோ்தல்களில் மருத்துவக்குழு நியமிக்கப்பட்டால், வாக்குச்சாவடி அலுவலா்களை போன்று எங்களுக்கும் தபால் வாக்கு அளிக்க உரிமை வழங்க வேண்டும். இதேபோல், வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம், படி என எதுவும் எங்களுக்கு கிடையாது. இதனால் நாங்கள் எங்களது சொந்த செலவில் தான் வாக்குச்சாவடிக்கு வந்து சென்றோம். எனவே, வரும் தோ்தல்களில் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு வழங்கப்படும் ஊதியம் போல, எங்களுக்கும் ஊதியம் வழங்க வேண்டும், வாக்குகளை பதிவு செய்வதற்கு தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என தோ்தல் ஆணையத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளோம் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com