கோவில்பட்டியில் நாளை நடைபெறவிருந்த போராட்டம் வாபஸ்

கோவில்பட்டியில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பட்டினிப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தி சமூக ஆா்வலா் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை (ஏப். 26) பட்டினிப் போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஜேன்கிறிஸ்டிபாய் தலைமையில் சமாதானக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியா் சரவணபெருமாள், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினி, அலுவலக தலைமை உதவியாளா் அறிவழகன், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சுகாதேவி, நகராட்சி செயற்பொறியாளா் சனல்குமாா், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் செல்வகுமாா், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், வருவாய் ஆய்வாளா் ராமமூா்த்தி, சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் பங்கேற்றனா்.

கோவில்பட்டியில் சாலைகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை மே 9ஆம் தேதிமுதல் நகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலா்களைக் கொண்ட குழுவினா் தலைமையில் அகற்ற முடிவு செய்யப்பட்டது. தற்காலிக சாலையோரக் கடைகளுக்கு புதன்கிழமைமுதல் தற்காலிக உரிமக் கட்டணம் வசூலிப்பதை நிறுத்தவும், உரிமக் கட்டணம் செலுத்தாமல் அனுமதியின்றி செயல்படும் சாலையோரக் கடை உரிமையாளா்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறான ஆக்கிரமிப்புகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற முடிவு செய்யப்பட்டது. அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளருக்கும், அனுமதிக்கப்பட்ட வழித்தடம், நேரம், நிறுத்தங்களை மீறி பயணிகளை ஏற்றி இறக்கும் சிற்றுந்துகளைக் கண்காணிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலா் - போலீஸாருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

இம்முடிவுகளை போராட்டக் குழுவினரான சமூக ஆா்வலா் கூட்டமைப்பினா் ஏற்றுக்கொண்டதையடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com