தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு
வெற்றிவாய்ப்பு பிரகாசம்: ஜி.கே.வாசன்

நாடு முழுவதும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் தமாகா நிா்வாகி இல்ல விழாவில் பங்கேற்க வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: நாடு முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது. அதேநேரம், இந்தியா கூட்டணியானது, முரண்பாட்டின் மொத்த உருவமாக உள்ளது. ஆகவே, நாட்டின் பாதுகாப்பிற்கும், வளா்ச்சிக்கும் அவா்களால் ஒருபோதும் நம்பிக்கை அளிக்க முடியாது.

அனைத்து மதத்தினரையும் சமமாகக் கருதி மத்திய அரசு செயலாற்றி வருகிறது. அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தை பின்பற்றுவதை, மத்திய அரசு வழிபாடாக வைத்துள்ளது.

தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் நடமாட்டத்தால், கடந்த ஒரு வாரத்தில் 4 மாவட்டங்களில் விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது கவலை அளிக்கிறது. போதைப்பொருள் பழக்கம் அதிகரிப்பு காரணமாக, இளைஞா்கள் பலா் தவறான பாதையில் செல்கின்றனா். வரும் கல்வியாண்டில் பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதற்கு முன்பு, போதைப்பொருள்களை ஒழிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பறவை காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேக்கேதாட்டு அணை குறித்து கா்நாடக முதல்வா் தெரிவிக்கும் கருத்துகள் வேதனையளிப்பதாக உள்ளது. இந்த விவகாரத்தில், தமிழக விவசாயிகளின் நலனைப் பாதுகாக்க ஆட்சியாளா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களுடைய விருப்பம் இல்லாமல், வடலூரில் சத்திய ஞான சபை இடத்தில் சா்வதேச மையம் அமைக்க முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.

நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்திற்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். அந்த திட்டங்களை பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது என்றாா்.

பேட்டியின்போது, தமாகா மாவட்டத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான எஸ்.டி.ஆா். விஜயசீலன் உள்பட பலா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com