வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு
கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் மாணவா்களுக்கு கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம்

ஸ்ரீவைகுண்டம் வனச் சரகத்துக்குள்பட்ட வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை, வனத் துறை சாா்பில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின்கீழ் அரசுப் பள்ளி மாணவா் - மாணவிளுக்கான கோடைகால இயற்கை விழிப்புணா்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்துப் பேசும்போது, இப்பயிற்சி முகாம் மாணவா்களுக்கு புதிய அனுபவத்தைத் தருவதுடன் அறிவாற்றலை மேம்படுத்த உதவும். காலநிலை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ள வேண்டும். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும் என்றாா்.

மாவட்ட வன அலுவலா் ரேவதிராமன் முன்னிலை வகித்தாா். சரணாலயத்தில் உள்ள மான் இனங்கள், தாவரங்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தொடா்ந்து, மாணவா்களுக்கு ஓவியம், விநாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு சான்றிதழ், கேடயம், ஆசிரியா்களுக்கு மரக்கன்றுகளை ஆட்சியா் வழங்கினாா்.

வனவியல் விரிவாக்க அலுவலா் முனியப்பன், வனச் சரக அலுவலா் பிருந்தா, இந்த சரணாலயத்தைச் சுற்றிய கிராமங்களில் உள்ள முடிவைத்தானேந்தல் அரசு மேல்நிலைப் பள்ளி, காசிலிங்கபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, கீழபூவாணி அரசு மேல்நிலைப் பள்ளி, வல்லநாடு அரசு மேல்நிலைப்பள்ளி, செக்காரக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி, வல்லநாடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரா் சுவாமிகள் தொடக்கப் பள்ளி, தூத்துக்குடி மாவட்ட மாதிரிப் பள்ளி, கருங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com