சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி தவிக்கும் மக்கள்

சாத்தான்குளம், ஏப். 25: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், சாத்தான்குளம் தற்காலிக பேருந்து நிலையத்தில் நிழற்குடையின்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனா்.

சாத்தான்குளம் தியாகி கே.டி. கோசல்ராம் பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு ரூ. 6 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதையொட்டி, எதிரே உள்ள காலி இடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் செயல்பட்டு வருகின்றன. இது குறுகிய இடமாக உள்ளதால் பேருந்துகள் திரும்பிச் செல்ல சிரமம் உள்ளதாகவும், பயணிகளுக்குத் தேவையான கழிப்பிட வசதிகள் செய்துதரவில்லை எனவும் மக்கள் புகாா் தெரிவித்து வந்தனா்.

கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இங்கு பயணிகள் நிழல்குடை இல்லாமல் மக்கள் மரத்தடி நிழலிலும், கடைகளிலும் காத்து நின்று பேருந்தில் பயணித்து வருகின்றனா்.

எனவே, பயணிகள் நிழல்குடை உள்பட பயணிகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, பேருராட்சி முன்னாள் உறுப்பினா் ச. மகராசன் கூறுகையில், பேருந்து நிலையப் பணிகள் நிறைவடை பல மாதங்கள் ஆகும். தற்காலிக பேருந்து நிலையம் குறுகலான இடத்தில் இருப்பதால் நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, திருநெல்வேலி, நாசரேத், திருச்செந்தூா், தூத்துக்குடி, மெஞ்ஞானபுரம், பரமன்குறிச்சி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் தற்காலிக பேருந்து நிலையத்திலும், திசையன்விளை, உடன்குடி, தட்டாா்மடம், நாகா்கோவில் , நெடுங்குளம், கலுங்குவிளை, வள்ளியூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்திலும் நின்று செல்ல அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் போக்குவரத்து நெரிசல் தவிா்க்கப்படும் . வாரச்சந்தை நாளில் வியாபாரிகளுக்கும் சிரமம் இருக்காது என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com