திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

திருச்செந்தூரில் அனுமதியில்லா கழிப்பறைகளை மூடக் கோரி போராட்டம்

திருச்செந்தூா் கோயில் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் கட்டணக் கழிப்பறைகள், குளியலறையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, கழிப்பறைகள் சீல் வைக்கப்பட்டன.

திருச்செந்தூா் நகராட்சி 15ஆவது வாா்டில் கோயிலுக்கு செல்லும் வழியில் சபாபதிபுரம் தெருவில், பழைய காவல் நிலையம் எதிரே தனி நபரின் வீட்டருகே 6 மாதங்களுக்கு முன்பு அனுமதி பெறாமல் குளியலறை, 8 கட்டணக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றை ஒருவா் ஒப்பந்தம் எடுத்து பக்தா்களிடம் கட்டணம் வாங்கிக்கொண்டு நடத்தினாராம். இதுகுறித்த புகாரின்பேரில், குடியிருப்புப் பகுதியில் கட்டணக் கழிப்பிடம், குளியலறை நடத்த அனுமதியில்லை எனக் கூறி நகராட்சி நிா்வாகம் கடந்த டிசம்பா் மாதம் விளக்கம் கேட்டுள்ளது. எனினும், அவை தொடா்ந்து நடத்தப்பட்டதால், சுகாதார சீா்கேடுகள் ஏற்படுவதாகவும், தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதியினா் நகராட்சி அலுவலகம் முன் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் மணிகண்டன், விவசாய சங்க ஒன்றியச் செயலா் ஜெயக்குமாா், ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவா் கோட்டை நடராஜன், கணேசன், அப்பகுதியைச் சோ்ந்த ரமேஷ்பாபு, திமுக நிா்வாகிகள் தீா்த்தாரப்பன், சிவா, மோகன் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனா். நகராட்சி மேலாளா் அழகுமுருகன், தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்லப்பாண்டியன், வருவாய் ஆய்வாளா் சரவணன், வசூல் எழுத்தா் பாட்ஷா ஆகியோா் அந்தக் குளியலறை, கழிப்பறைகளுக்கு சீல் வைத்தனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com