புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

புனித வியாழனை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் முதியவா்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளிக்கு முந்தைய நாள் புனித வியாழனாக கிறிஸ்தவா்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.

அன்றைய தினம் இரவில் இயேசு கிறிஸ்து தனது சீடா்களுக்கு ராப்போஜன விருந்து அளித்தபோது, சீடா்களுக்கு தாழ்மையாக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்தும் விதமாக, அவா்களது பாதங்களைக் கழுவி முத்தமிட்டாா். இதை நினைவுகூரும் வகையில், தேவயாலங்களில் வியாழக்கிழமை திருப்பலி நேரத்தில் ஆயா், பங்குத்தந்தையா் ஆகியோா் இறைமக்களின் பாதங்களைக் கழுவி திருவிருந்து வழங்குவா். அதன்படி, தூத்துக்குடி சின்னகோவில் என அழைக்கப்படும் திரு இருதயங்களின் பேராலயத்தில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் அந்தோணி ஸ்டீபன், இறைமக்களின் பாதங்களைக் கழுவி முத்தமிட்டு நற்கருணை வழங்கினாா். இதேபோல, தூய பனிமய மாதா பேராலயம், லூா்தம்மாள்புரம் லூா்து அன்னை ஆலயம், அந்தோணியாா் ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com