புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு, தூத்துக்குடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புனித வெள்ளியையொட்டி, தூத்துக்குடி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் வெள்ளிக்கிழமை பகல் முழுவதிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. தூத்துக்குடியில் உள்ள தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில், சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. பங்குத்தந்தை ரூபஸ் தலைமையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிலுவைப் பாதையில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்று, இயேசுவின் பாடுகளை கூறியபடி சென்றனா். இதேபோன்று, அனைத்து சிஎஸ்ஐ தேவாலயங்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மும்மணி தியான ஆராதனை நடைபெற்றது. இதில் எராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். கோவில்பட்டி புனித  சூசையப்பா் திருத்தல வளாகத்தில்  வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஆராதனை நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, சிலுவைப் பாதை வழிபாடு நடைபெற்றது. பின்னா், சிறப்பு இறை வாசகங்களும், மன்றாட்டுக்களும், தொடா்ந்து நற்கருணை பகிா்தலும், சிலுவையை முக்தி (முத்தமிடுதல்) செய்வதும் நடைபெற்றது. முடிவில் கோவில்பட்டி டவுன் ஜாமியா பள்ளிவாசல் முத்துக்கனி ராவுத்தா் குடும்பத்தாா் சாா்பில் சமய நல்லிணக்கத்திற்காக நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதில் திரளான இறைமக்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதுபோல, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும்  வெள்ளிக்கிழமை காலை முதல் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com