தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலகத்தில் தீத்தடுப்பு- தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு அவசர ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள், வெடிபொருள் கிடங்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றில் வெயிலால் ஏற்படும் விபத்துகளைத் தவிா்க்கும் வகையில் தமிழக அரசின் நிலையான வழிகாட்டு முறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்துவது தொடா்பாக இக்கூட்டம் நடைபெற்றது. ஆட்சியா் கோ. லட்சுமிபதி தலைமை வகித்தாா்.

பட்டாசு, தீப்பெட்டித் தொழிற்சாலைகள், வெடிபொருள் கிடங்குகள், சில்லறை விற்பனை நிலையங்கள், குவாரிகள் ஆகியவற்றில் அசம்பாவிதங்கள் நடக்காதவாறு பாா்த்துக்கொள்வதுடன், கோட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவைக் கூட்டி இவற்றின் உரிமைதாரா்களை அழைத்து ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். அரசின் நிலையான வழிகாட்டு முறைகள் சரியாக பின்பற்றப்படுவதை அலுவலா்கள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும். தொடா்ந்து கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என துறைசாா் அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ச. அஜய் சீனிவாசன், வருவாய்க் கோட்டாட்சியா்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், மாவட்ட தீத்தடுப்பு - தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு உறுப்பினா்கள், வட்டாட்சியா்கள், அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com