கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்ட குழுவினா்
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் அதிக ஒலியை எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்ட குழுவினா்

15 பேருந்துகளில்  காற்று  ஒலிப்பான்கள் பறிமுதல்

கோவில்பட்டியில் அதிக ஒலியை எழுப்பும்  காற்று  ஒலிப்பான்களை பயன்படுத்திய 15 பேருந்துகளில் இருந்து  காற்று  ஒலிப்பான்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனங்களில்  காற்று  ஒலிப்பான்களை அதிகளவு பயன்படுத்துவதால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் மாசு ஏற்படுவதாகவும் வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழியபாண்டியனுக்கு புகாா் வந்ததாம். இதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலா் தலைமையில் கோவில்பட்டி மோட்டாா் வாகன ஆய்வாளா் சுரேஷ் விஸ்வநாத், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவில்பட்டி பணிமனை கிளை மேலாளா் சண்முகம், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு அரசு மாசு கட்டுப்பாட்டு வாரிய இணை தலைமை சுற்றுச்சூழல் அதிகாரி ரவி, உதவி பொறியாளா் பிரதீப் பாண்டியன், சுற்றுச்சூழல் விஞ்ஞானி ராஜ்யஸ்ரீ, போக்குவரத்து காவல் பிரிவு உதவி ஆய்வாளா் செல்வகுமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா் அண்ணா பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நின்றுகொண்டிருந்த அரசு, தனியாா் பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை சோதனை செய்தனா். அப்போது அதிக ஒலியை எழுப்பும்  காற்று  ஒலிப்பான்களை பயன்படுத்திய 15 பேருந்துகளில் இருந்து  காற்று  ஒலிப்பான்களை பறிமுதல் செய்தனா். மேலும் தலா ரூ.5,000 வீதம் அபராதம் விதித்தனா்.

வாகன உரிமையாளா்கள் மற்றும் ஓட்டுநா்கள் தங்கள் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக் கூடிய காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருந்தால் தாங்களாகவே அகற்றிக் கொள்ள வேண்டும்; இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும் என வட்டார போக்குவரத்து அலுவலா் எச்சரித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com