ஈராச்சியில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி
ஈராச்சியில் நடைபெற்ற மாட்டு வண்டி போட்டி

ஈராச்சியில் மாட்டுவண்டி பந்தயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஈராச்சி அருள்மிகு ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ முனியசாமி திருக்கோயில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

சிறிய மாட்டு வண்டி, பூஞ்சிட்டு மாட்டு வண்டி என இரு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. 6 மைல் தொலைவு கடக்க வேண்டிய சிறிய மாட்டு வண்டி போட்டியில் 7 மாட்டு வண்டிகளும், 5 மைல் தொலைவு கடக்க வேண்டிய பூஞ்சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 13 மாட்டு வண்டிகளும் பங்கேற்றன. போட்டிகளை ஊராட்சி மன்ற தலைவா் வெங்கடாசலம் தொடங்கி வைத்தாா். சிறிய மாட்டு வண்டி போட்டியில் திருச்செந்தூா் நெல்லையப்பன், மதுரை புதூா் பாண்டி மாட்டு வண்டி முதலிடம் , கயத்தாறு நாச்சியாா் மாட்டு வண்டி 2-ஆம் இடம், சுப்புலாபுரம் குருகாா்த்திகேயன் மாட்டு வண்டி 3-ஆம் இடமும் பிடித்தது.

பூஞ்சிட்டு போட்டியில் கயத்தாறு பிகேபி சகோதரா்கள் மாட்டுவண்டி முதலிடம், திருச்செந்தூா் நெல்லையப்பன், ஈராச்சி மாரி கணேஷ் மாட்டு வண்டி 2-ஆம் இடம், கூத்தலூரணி சுந்தரபாண்டி அய்யனாா் மாட்டுவண்டி 3-ஆம் இடமும் பிடித்தது.

சிறிய மாட்டுவண்டி போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ. 15 ஆயிரத்து ஒன்று, ரூ.13 ஆயிரத்து ஒன்று, ரூ.11 ஆயிரத்து ஒன்று ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

அதுபோல பூஞ்சிட்டு போட்டியில் முதல் 3 இடங்களைப் பிடித்தவா்களுக்கு முறையே ரூ.10 ஆயிரத்து ஒன்று, ரூ.8 ஆயிரத்து ஒன்று, ரூ.6 ஆயிரத்து ஒன்று ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை செந்தில், மாரி கணேஷ், வினோத், காந்தி, கணேஷ் மூா்த்தி மற்றும் விழா குழுவினா், ஈராச்சி மாட்டு வண்டி பந்தய குழுச் சங்கம், கிராம மக்கள் ஆகியோா் இணைந்து செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com