ரயில் நிலையச் சாலையில் தடுப்புச் சுவர்அகற்றப்படுமா?

பட்டுக்கோட்டை, அக். 15:  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரயில் நிலையச் சாலையின் நடுவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.     கடந்த சில மாதங்களுக்கு

பட்டுக்கோட்டை, அக். 15:  தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் ரயில் நிலையச் சாலையின் நடுவில் கட்டப்பட்ட தடுப்புச் சுவரை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டுக்கோட்டை ரயில் நிலையச் சாலையின் நடுவில், தனியார் மனமகிழ் மன்றம் அருகிலிருந்து தொடங்கி, கரிக்காடு அரசு பயணிகள் விடுதி வரையிலும் சுமார் இரண்டரை அடி உயரம், ஒன்றரை அடி அகலத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் நெடுஞ்சாலைத் துறையினரால் நீண்ட தடுப்புச் சுவர்கட்டப்பட்டது.

    வாகனங்கள் நெரிசலில் சிக்காமல் எளிதாக ஒரு வழியாகச் செல்லவும், மற்றொரு வழியாக வரும் வகையிலும், விபத்துத் தடுப்பு முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாகவும் இந்த தடுப்புச் சுவர் கட்டப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், தடுப்புச் சுவர் கட்டப்பட்டதன் நோக்கத்துக்கு எதிராகவே சம்பவங்கள் நேரிடுவதால், அதை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

    தடுப்புச் சுவர் கட்டப்பட்டதால், இரண்டாகப் பிரிக்கப்பட்ட இந்தச் சாலை மிகவும் குறுகலாகிவிட்டது. இதனால், அந்தச் சாலையில் செல்லும் இலகுரக, கனரக வாகனங்கள் ஏதாவது கோளாறு காரணமாக நின்றுவிட்டாலோ, விபத்து நேரிட்டாலோ வாகனப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.

    மேலும், தடுப்புச் சுவரில்ல் ஆங்காங்கே குறிப்பிட்ட தொலைவுகளில் உள்ள இடைப்பட்ட பகுதிகளில் அலட்சியமாகத் திரும்பும் இரு சக்கர வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நேரிடுகின்றன.

    போக்குவரத்து வசதியை மேம்படுத்துவதாகக் கூறி கட்டப்பட்ட இந்தத் தடுப்புச் சுவரால் அடிக்கடி விபத்துகள்தான் நேரிடுகின்றன. தொலைநோக்குப் பார்வையின்றி, லட்சக்கணக்கில் பணத்தைச் செலவிட்டு, எந்தப் பயனும் இல்லாத வகையில் இந்தச் சாலைத் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

   அதேநேரம், பட்டுக்கோட்டை பெரிய கடைத் தெருவில் மக்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படும் வி.என்.எஸ். மார்க்கெட் பகுதியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான- மிகவும் மோசமான நிலையில் உள்ள சாலையைச் சீரமைத்துத் தருமாறு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகளிடம் பல முறை வலியுறுத்தியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழைக் காலத்தில் இந்தச் சாலையில் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாது.

   ஆனால், யாரும் கோரிக்கை விடுக்காத நிலையில், எந்தத் திட்டமிடலும் இன்றி, சாதக, பாதகங்களைப் பற்றி யோசிக்காமல் ரயில் நிலையச் சாலையில் தடுப்புச் சுவர் கட்டியது தவறு. எனவே, ரயில் நிலையச் சாலையில் உள்ள தடுப்புக் கட்டையை அகற்றுவதுடன், சாலையை அகலப்படுத்த வேண்டும் என்கிறார் அந்தப் பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் எம். ராஜேந்திரன்.

   மேலும், சாலையில் தடுப்புச் சுவர் கட்டுவதற்கு முன்னதாக மக்கள் பிரதிநிதிகள், அரசு, தனியார் பேருந்து நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள், நகர மக்கள், வணிகர்கள், அரசியல் கட்சியினர் ஆகியோரிடம் நெடுஞ்சாலைத் துறையினர் கலந்தாலோசனை செய்திருக்க வேண்டும் என்றார் அவர்.

   கரிக்காடு பகுதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற தஞ்சை மத்திய கூட்டுறவு வங்கிக் கிளை மேலாளர் ஆர். ராமசாமி கூறியது:

   பட்டுக்கோட்டை ரயில் நிலையச் சாலையில் எவ்வித இடையூறும் இன்றி வாகனங்கள் சென்று வந்தன. இதனிடையே, தடுப்புச் சுவர் கட்டியதால் அந்தச் சாலை குறுகலாகிவிட்டது. இதனால், சாலை விபத்துகள் அதிகரித்துள்ளன.

   மேலும், சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்துவது, தொலைபேசி, மின் கம்பங்களை சாலையிலேயே அமைந்திருப்பது போன்ற காரணங்களாலும் விபத்து நேரிடுகின்றன. மேலும், போக்குவரத்துக்கு பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன.

     இந்தத் தடுப்புச் சுவரை கட்டிய அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்புச் சுவரை உடனடியாக அகற்றி, இந்தச் சாலையில் அன்றாடம் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com