கோயில் காடுகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?

பட்டுக்கோட்டை, செப். 12:  மக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் கோயில் காடுகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.    இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாசாரங்கள் இன்றுவரை ப

பட்டுக்கோட்டை, செப். 12:  மக்களிடம் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் கோயில் காடுகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

   இந்தியாவின் பாரம்பரியமிக்க கலாசாரங்கள் இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருவதற்குச் சான்றாக கோயில் காடுகள் விளங்குகின்றன. ஒவ்வொரு கிராமத்திலும் கோயில்களைச் சுற்றிலும் அந்த இடத்துக்கே உரித்தான தாவரங்கள், கால்நடைகள், பறவைகள், நீர்த்தேக்கங்களை உள்ளடக்கிய பாதுகாக்கப்பட்ட சிறிய வனப் பகுதியே கோயில் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

   தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், அத்திவெட்டியில் பெரியசாமி கோயில் காடு, பிச்சினிக்காட்டில் வைரப்பசாமி கோயில் காடு, ஏனாதி பாளமுத்தியில் செல்லியம்மன் கோயில் காடு ஆகியவை இன்றைக்கும் பிரசித்தி பெற்று விளங்குகின்றன.

   கோயில் காடுகளால் மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. மரம், செடி, கொடிகளின் கிளைகள், இலைகள் உதிர்ந்து, மக்குவதால் மண்ணின் வளம் அதிகரிக்கிறது. மேலும், பல்வகை விலங்குகள், பறவைகளுக்கு தங்குமிடமாக கோயில் காடுகள் விளங்குவதுடன், அவற்றுக்குத் தேவையான உணவும் இங்கேயே கிடைக்கிறது. கோயில் காடுகளில் பறவைகள், விலங்குகள் மூலம் விதைப் பரவல் அதிகரிப்பதால், இயற்கையிலேயே தாவரங்களின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகரிக்கிறது.

   பல்வகை மருத்துவ குணம் கொண்ட மூலிகைத் தாவரங்களின் இருப்பிடமாகவும் கோயில் காடுகள் திகழ்கின்றன. இந்தத் தாவரங்கள் காற்றிலுள்ள மாசுக்களின் அளவை வெகுவாகக் குறைத்து, மக்கள் உயிர் வாழத் தேவையான பிராண வாயுவை அதிகளவில் வெளியிடுகின்றன.

   இதன்மூலம் கிராமங்களில் நீர், நிலம், காற்று, பல்லுயிர் வளங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில் காடுகளை அரசு பாதுகாக்க முனைப்புடன் செயல்பட வேண்டியது அவசியம் என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

    "கோயில் சீரமைப்பு என்ற பெயரில் படிப்படியாக கோயில் காடுகள் அழிக்கப்படுவதை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.

திருவிழாக் காலங்களில் கோயில் காடுகளில் ஒலி மாசு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, கோயில் காடுகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பொது மக்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் போதிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும்' என்றும் வலியுறுத்துகின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com