பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சுகாதாரம் காக்கப்படுமா?

பட்டுக்கோட்டை, செப். 19: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் சுகாதாரச் சீர்கேட்டைப் போக்கி, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரு

பட்டுக்கோட்டை, செப். 19: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அதிகரித்து வரும் சுகாதாரச் சீர்கேட்டைப் போக்கி, நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகளை அரசு உடனடியாகச் செய்து தர வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்துகின்றனர்.

  சுமார் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது இந்த மருத்துவமனை. நோயாளிகள் எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில், இங்கு போதிய அடிப்படை வசதிகள் இன்றி, நாளுக்கு நாள் சுகாதாரக் கேடுகள் அதிகரித்து வருகின்றன.

  இந்த மருத்துவமனையில் கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளன. மேலும் கழிப்பறைத் தொட்டிகள் நிரம்பி, திடக் கழிவுகள் நிலப் பரப்பில் வெளியேறிக் கிடப்பதால், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது.

  நாள்தோறும் இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள், பார்வையாளர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அண்மையில் மருத்துவமனை வளாகத்தில் பார்வையாளர்கள் தங்குமிடம் கட்டப்பட்டது. ஆனால், அந்தக் கட்டடம் தற்போது தோல் நோய், பால்வினை நோய், பெண்களுக்கான நோய் சிகிச்சை மையமாகச் செயல்படுகிறது. இதனால்,பார்வையாளர்கள் வழக்கம்போல மரத்தடியிலேயே நிற்க வேண்டியிருக்கிறது.

  இதுதவிர, இருதய சிகிச்சைப் பிரிவு கட்டட வாசலில் சாய்வுத் தளம் அமைக்கப்படாததால், சக்கர நாற்காலியில் அழைத்து வரப்படும் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

  இதுபோல, மருத்துவமனை வளாகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தரைத் தளமும் சமமாக இல்லாததால், தள்ளுவண்டியில் கொண்டு வரப்படும் நோயாளிகளும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

  பட்டுக்கோட்டை பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கின்றன. சில நேரங்களில் அதிகளவிலானோர் காயமடைந்து இங்கு கொண்டு வரப்படுகின்றனர். இதேபோல, சத்துணவு மையங்களில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்டு, உடல் நலக் குறைவு ஏற்படும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் இங்குதான் அழைத்து வரப்படுகின்றனர். ஆனால், அந்த நேரங்களில் அவர்களுக்கு படுக்கை வசதியுடன் சிகிச்சையளிக்க இங்கு வசதியில்லை.

  இந்த மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள கண் அறுவைச் சிகிச்சைக்கான உபகரணங்கள் உள்ளன. ஆனால், கண் மருத்துவர் பணியிடம் காலியாகவே உள்ளது.

  மேலும் மகப்பேறு, தோல் நோய் சிகிச்சைக்கு தனி இட வசதி இல்லை. எக்ஸ்ரே பிரிவு இயங்கினாலும் அடிக்கடி பிலிம் இல்லை எனக் கூறி விடுவதால், ஏழை நோயாளிகள் தனியாரிடம் கட்டணம் செலுத்தி எக்ஸ்ரே எடுக்க வேண்டியுள்ளது.

  இங்கு பாம்பு, நாய்க்கடி மருந்துகள் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பில் இல்லாததால், பாதிக்கப்பட்டோர் தனியார் மருத்துவமனையில் அதிகத் தொகை செலவழித்து சிகிச்சை பெற வேண்டியிருக்கிறது.

  இங்கு வரும் நோயாளிகள் தங்கள் துணிகளைத் துவைத்து உலர்த்த, கொடி கட்டித் தர வேண்டும் என்ற தங்களது சாதாரணக் கோரிக்கைகூட இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர்.

  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியது:

  மருத்துவமனையில் நாள்தோறும் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும். சாக்கடை நீரைத் தேங்கவிடக்கூடாது. சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கூடுதலாக கட்டணக் கழிப்பறைகளைக் கட்ட வேண்டும். பார்வையாளர்கள் தங்குமிடத்தை வேறு சேவைக்குப் பயன்படுத்தக் கூடாது.

  கண் அறுவை சிகிச்சைக்கென தனி அறை தேவை. அந்தப் பிரிவுக்கு தனி வார்டு அமைத்து, அங்கு 10 பேர் தங்ககுவதற்குப் படுக்கை வசதி செய்ய வேண்டும்.

  கண், காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். தற்போதுள்ள புற நோயாளிகள் சிகிச்சை மையத்தில் இடப் பற்றாக்குறை இருப்பதால், ஜவான் வார்டு அருகே பழுதடைந்த நிலையிலுள்ள மருத்துவர்களுக்கான குடியிருப்புகளை அகற்றிவிட்டு, அங்கு புதிதாக புற நோயாளிகள் சிகிச்சை மையத்தைக் கட்ட வேண்டும்.

  சித்த மருத்துவம், தோல் நோய் சிகிச்சை, மகப்பேறு, தீக்காயச் சிகிச்சை ஆகிவற்றுக்கும் தனித்தனியே இடம் ஒதுக்க வேண்டும்.

  புரியாத புதிர்: பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரில் அவசர சிகிச்சை, சாதாரணச் சிகிச்சை என்ற பேதமின்றி, 90 சதம் பேர் உடனடியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.

  இதனால், சாதாரண நோய்க்குக்கூட இங்கு சிகிச்சையளிக்க முடியாதா, பிறகு எதற்காக இந்த மருத்துவமனை எனக் கேட்டு நோயாளிகள் தகராறு செய்யும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

  இவ்வாறாக, தீவிர சிகிச்சை என்ற பெயரில் பெரும்பாலான நோயாளிகளை தஞ்சைக்கு அனுப்புவது ஏன் என்பது புரியாத புதிர்.  இந்த நிலை மாற வேண்டும். சாதாரண நோய்களுக்கு மட்டுமாவது, இங்கேயே சிகிச்சையளிக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com