நமசிவாய மூர்த்திகள் குருபூஜை:​ 14 பேருக்கு விருதுகள் அளிப்பு

மயிலாடுதுறை, ஜன. 23: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில், ஆதீன குரு முதல்வர் அருள்திரு நமசிவாய மூர்த்திகளின் குரு பூஜை விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீ

மயிலாடுதுறை, ஜன. 23: நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில், ஆதீன குரு முதல்வர் அருள்திரு நமசிவாய மூர்த்திகளின் குரு பூஜை விழா சனிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீனத்தின் குரு முதல்வர் அருள்திரு நமசிவாய மூர்திகளின் குரு பூஜை விழா (தை- அசுவதி), ஆதீனத்தில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும். மகரத் தலைநாள் விழாவான குரு பூஜையையொட்டி, திருவாவடுதுறை ஆதீனத்தில் 10 நாள்கள் விழா நடைபெறும்.

நிகழாண்டுக்கான குரு பூஜை விழா, கடந்த 14-ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது. தினமும், திருமுறை விண்ணப்பம் மற்றும் அறிஞர்களின் சைவ சமய சொற்பொழிவுகள் நடைபெற்றன.

ஆதீன குரு முதல்வர் நமசிவாய மூர்த்திகளின் குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அருள்திரு நமசிவாய மூர்த்திகளின் தோத்திர நூல்கள் பாராயணம் நடைபெற்றது. காலை 8.50 மணிக்கு நமசிவாய மூர்த்திகள் குரு பூஜை சிறப்பு நீராட்டு வழிபாடு நடைபெற்றது.

காலை 11 மணிக்கு அருள்மிகு ஞானமா நடராசப் பெருமான் சந்நிதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சைவ சித்தாந்த அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா அருள்திரு நமசிவாய மூர்த்திகள் சன்னதியில் நடைபெற்றது.

திருவாவடுதுறை ஆதீன குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பராமாசாரிய சுவாமிகள், சைவ சித்தாந்த அறிஞர்கள் 11 பேருக்குப் பொன்னாடை மற்றும் உருத்திராக்க மாலை, பொற்கிழி ஆகியவற்றுடன் விருதுகளை வழங்கினார்.

நூல் வெளியீட்டு விழா:

இடைமருதூர் கி. மஞ்சுளா எழுதிய "உடனாய் நிற்கின்றான்' என்னும் சைவ சித்தாந்த நூல் வெளியீட்டு விழா பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.

ஆதீன குரு மகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பராமாசாரிய சுவாமிகள், இந்த நூலை வெளியிட்டார். "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, நூலின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.

பிற்பகல் நிகழ்ச்சியாக, ஆதீன குருமகா சன்னிதானம் அருள்மிகு கோமுத்தீசுவரர் திருக்கோயில் தரிசன நிகழ்ச்சி இரவு 7.30 மணிக்கு நடைபெற்றது. இரவு சுமார் 8.30 மணிக்கு அருள்திரு நமசிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், ஆதீன குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பராமாசாரிய சுவாமிகள், சைவ சித்தாந்த அறிஞர்கள் 3 பேருக்கு விருதுகளை வழங்கினார்.

திருவாவடுதுறை ஆதீன குரு முதல்வர் அருள்திரு நமசிவாய மூர்த்திகள் குரு பூஜையின் நிறைவு நிகழ்ச்சியாக சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வேணு வனலிங்க விலாச அரங்கில் சிவஞானக் கொலுக்காட்சி நடைபெற்றது. சூரியனார்கோயில் ஆதீனம் சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசி மடத்தின் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் ஆதீனம் திருக்கடையூர் கட்டளை விசாரணை திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், செங்கோல் ஆதீனம் கல்யாணசுந்தரம் பண்டார சன்னிதி, வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு மற்றும் ஆதீனப் புலவர்கள், சைவ சித்தாந்த அறிஞர்கள், ஓதுவா மூர்த்திகள், சைவ சமயப் பற்றாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com