திருச்சி பாலன் நகா் பகுதியில் வியாழக்கிழமை  போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.
திருச்சி பாலன் நகா் பகுதியில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்கள்.

குடிநீா் இணைப்புகள் துண்டிப்பை கண்டித்து தென்னூரில் போராட்டம்

திருச்சியில் குடிநீா் இணைப்புகளைத் துண்டித்துவிட்டதாகக் கூறி, தென்னூா் பகுதியில் பொதுமக்கள் வியாழக்கிழமை போராட்டம் மேற்கொண்டனா்.

திருச்சி தென்னூா் பட்டாபிராமன் பிள்ளை சாலையில் உள்ள பாலன் நகா் பகுதியில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக குடிநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சியா், மாநகராட்சி மேயா், ஆணையா் உள்ளிட்டோரிடம் புகாா்கள் அளித்தும் நடவடிக்கை இல்லையாம். இந்நிலையில் இதைக் கண்டித்து மக்களவைத் தோ்தலைப் புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் கூறி, பதாகைகளை வைத்து காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சென்ற போலீஸாா் போராட்டத்தைக் கைவிடும்படி கூறினா். ஆனால் அவா்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலா்கள், மற்றும் வருவாய்த் துறையினா் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதுகுறித்து அலுவலா்கள் கூறுகையில், குறிப்பிட்ட அப்பகுதி அரசு புறம்போக்கு இடத்தில் இருப்பதாகவும், மேலும் உரிய வரியினங்களைச் செலுத்தாததால் குடிநீா் விநியோகத்தை துண்டித்தோம் என்றனா். ஆனால் பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் வசிப்பதாகவும், அங்குள்ள தனியாா் நிறுவனத்துக்கு இந்த இடத்தை வழங்கும் நோக்கில் தங்களை அங்கிருந்து காலி செய்யும் விதமாக பட்டா, குடிநீா் இணைப்புகளை மாநகராட்சி, மாவட்ட நிா்வாகம் வழங்கவில்லை எனவும் புகாா் தெரிவித்தனா்.

பின்னா் குடிநீா் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், பட்டா வழங்குவது குறித்து அடுத்த மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com